Saturday, June 11, 2011

சமூகப் பணியின் அடையாளம் சாரணியம்




வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நுட்பங்களில் பல்வேறு மாற்றங்களையும், நவீன சிந்தனையுடனான புதுமைகளையும் செய்து மாணவர்களின் உள்ளங்களில் பதிவை ஏற்படுத்த வேண்டும் இதைத்தான் தற்கால கல்வி செயற்திட்டம் தேர்ச்சி அடிப்படையிலானதும், செயற்பாடுகளினூடாகவும் சூழலுடன் இடையறாது தொடர்புபடுத்தி மாணவர்களிடம் மகிழ்ச்சியையும், விருப்பையும் தாரளமாக அனுபவித்து அதன் மூலம் வெற்றியை நோக்கியதாக பிள்ளையின் ஆற்றலை உருவாக்குவதே இன்றைய கல்வி நடைமுறைகள்.
அந்த வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்ததாக பல்வேறு ஆக்கபூர்வ செயற்பாடுகளையும், மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் இணைத்து கற்றலை சிறப்பாக உருவகிக்க முடியும். இதனால்தான் இன்றைய நவீன கற்றலிலும் மாணவர் அடைவை மெருகூட்டி இன்னும் இன்னும் அதனை வளர்த்துச் செல்வதற்கு உகந்த பலவிதமான செயற்பாடுகளின் ஓர் அம்சமாகவே சாரணியச் செயற்பாடுகள் பாடசாலை, மட்டத்தில் மட்டுமன்றி குருளைச் சாரணர் என்றும், வளர்ந்தோர் (திரி) சாரணர் என்றும், பெண் சாரணர், கடல் சாரணயம் என்றும் பலவிதமான பெயர்களுடன் சமூகத்தின் அனைத்து தரப்பாரிடமும் இன்று சாரண செயற்பாடுகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதற்கு காரணம் அதனது அடிப்படையான சாரணியத் தத்துவங்கள் உதவியாக அமைந்திருப்பதேயாகும். ஆதலால்தான் கல்விப் புலத்தார் மட்டுமன்றி அனைத்துத் தரத்தாரையும் கவர்ந்திழுத்து நாட்டின் ஜனாதிபதி முதற்கொண்டு சாதாரண பாமரன் வரை இணைத்துள்ளது.

மனச்சாந்தி சமத்துவம், நம்பிக்கை, மரியாதை, நேசம் போன்ற சாரண விதிகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு மனித கெளரவத்தின் மீது வாக்குறுதி அளிக்கின்ற ஓர் உலகளாவிய அமைப்பே இச்சாரணிய அமைப்பு.
நாட்டுப் பற்றுமிக்கவர்களை உருவாக்குவதற்காக பலகோடி ரூபாய்களை செலவு செய்தும் கிடைக்காத ஒரு விடயத்தை ஒரு சிறு வார்த்தையில் லண்டனில் பிறந்த பேடன் பவல் இந்த சாரண உருவாக்கம் பல கோடி மக்களின் மனங்களில் சுடர்விட்டெரிய காரணமாக இருந்திருக்கிறார். அவர் இட்டுச் சென்ற பாதையானது மிகவும் சாந்தமானது, மனிதனை புனிதனாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும். எனவேதான் ‘நாட்டுப் பற்றுமிக்கதும், சதாகாலமும் பிறருக்கு உதவுகின்றதுமான’ தாரக மந்திரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்தான் சாரணியத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்ற பெரியார் ‘றொபட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பவல் பிரவு’ மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் பிறந்தது 1857 பெப்ரவரி 22ஆம் திகதியாகும். அதனைத்தான் ‘பேடன் பவல் தினம்’ அல்லது ‘ஸ்தாபகர் தினம்’ என்று இன்று இத்தினத்தை சாரணிய உலகம் அழைக்கிறது.
இவர் இங்கிலாந்தில் பிறந்து தனது 19ஆம் வயதில் இராணுவச் சிப்பாயாக பயிற்சி பெற்றதன் பின்னர் வீரதீரமிக்க உப லெப்டினனாக இந்தியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுக்கு சென்ற வேளைகளில் அங்கு கண்ணுற்ற பல்வேறு மனித இம்சைகளையும், அமைதியற்ற நிலையில், வாழ்வின் விளிம்பில் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த மனிதர்களின் அவலங்களையும் கண்டு மிகவும் மனம் நொந்து இதற்கான வழியைத் தேடுவதற்கு தன்னை தயார்படுத்தினார்.

அதன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து சென்று இதற்குரித்தான விடிவினைக் காணும் நோக்குடன் இராணுவத்திலிருந்தே விலகி விடையும் கண்டார். அதுதான் ‘சாரணியத்துறை’ பற்றிய நூலினை எழுதி வெளியிட்டு சாரணியத்தின் நல்ல பல கருத்துக்களையும் இதன்மூலம் முன்வைத்து உலகிற்கே அறைகூவல் விடுத்தார். அதன் பிற்பாடு, 1907 ஆம் ஆண்டில் பிறவுன்ஸி தீவில் 20 மாணவர்களுடன் சென்று அங்கிருந்து சிந்தித்ததன் வெளிப்பாடுதான் நாம் காணுகின்ற சாரணியத்தினது முதலாவது ஒன்று கூடலாக அன்று மலர்ந்திருந்தது.
தனிமையில் ஒருமனிதன், மதம் கலாசாரத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகத்தையே வெளிக்கொணர வைத்ததற்கு தன்னலமற்ற தியாக உணர்வும், மனித கெளரவத்தினை மதிக்கின்ற பண்பினையும் கொண்டமைந்த விளைவுகளை சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகள் இச்சாரணிய அமைப்பினுள் உள்வாங்கப்பட்டதன் காரணம் பேடம் பவலினது மனிதனை மனிதனாக மதிக்கின்ற சாரணியத்தினது தோற்றுவாய் மிகவும் மனிதநேயமுடையதாய் காணப்பட்டது என்பதே.
ஒரு சாரணன் தனது வாக்குறுதியினை எடுக்கின்ற முறையோ மிக வித்தியாசமான முறையாக கொள்ளப்படுகிறது. இவற்றின் பிரகாரம் தனது கட்டை விரலையும் சுண்டு விரலையும் மடித்து மற்ற மூன்று விரல்களையும் விரித்து (நேராக நிமிர்த்தி ஒட்டியவாறு) சாரண வாக்குறுதி பெறல் வேண்டும். ‘என்னால் கூடுமானவரை என் சமயத்திற்கும், நாட்டிற்கும், என் கடமைகளைச் செய்வேன் எனவும், எக்காலத்திலும் பிறருக்கு உதவிபுரியவும், சாரண விதிகளுக்கு அமைவாகவும் பணிந்து நடப்பேன். என என் கெளரவத்தின் மீது சத்தியம் செய்கிறேன்’ என்று வாக்குறுதி பெறுவதன் ஊடாக சாரண இயக்கம் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சமூகத்தின் நலனே தனது நலன் எனக் கருதி தொண்டு செய்வதற்கு அர்ப்பணித்துள்ளது. சிறு வயது முதல் நற்கல்வியை கற்று சீரும் சிறப்புமிக்கதான ஒழுக்க விழுமியமுள்ள பண்பாளனாக, நேர்மையாளனாக பண்பும் பாசமும் கொண்டமைந்த முழுமையாக மனிதனை உருவாக்கும் கைங்கரியத்தினை இன்று சாரண இயக்கம் பாடசாலையிலிருந்தே வளர்த்து வந்துள்ளது.
நம்பத் தகுந்தவன், பற்றுறுதியாளன், நேசமும் மரியாதையும் கொண்டவன், மற்ற சாரணனுக்கு சகோதரன், வீரம் தெரிந்தவன், பிராணிகளின் தோழன், ஒத்துழைப்பவன், மகிழ்ச்சியுடையவன், சிக்கனமானவன், தனது எண்ணம், சொல், செயல் போன்றவைகளில் மிகவும் தூய்மையானவனாக காணப்படுபவனே சிறந்த சாரணன்’ எனவும் சாரண விதிகள் கூறுகின்ற அதேவேளை, இதன் வீரவசனங்களைக் கொண்டுதான் இவ்வியக்கம் உலகில் மதிக்கப்படுகின்ற மிகப்பெரியதோர் அமைப்பாக இன்று வளர்ச்சிபெற்றுள்ளமைக்கு இயக்கத் தோற்றுனர் ‘பேடன் பவல் பிரபு’ அவர்கள் தனது இளமைக் காலத்தில் உதைபந்து, நடிப்பாற்றல், சித்திரம், சங்கீதம் போன்ற துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும் காணப்பட்டமையும் ஒரு காரணமாக அமைந்திருந்ததேயாகும்.
‘பவல்’ தன்னுடைய 26வது வயதில் இராணுவத்தில் உயர் பதவியினைப் பெற்று ஆபிரிக்கா சென்ற வேளை இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின்போது ஸ¤லு இனத் தலைவனைப் பிடிப்பதில் வெற்றி கண்டார். அதன்விளைவு மிகவும் பாராட்டுக்குரியவராக பேடன் பவல் பிரபு திகழ்ந்திருந்தார். இவ்வாறான நல்ல பல செயற்பாடுகளும் சாரண இயக்கத்தின் தோற்றுவாய்க்கு ஆதாரமாக அமைந்திருந்தன.
தனது முதலாவது இளைஞர் சாரணியத்தை 1908ம் ஆண்டிலும் 1909ம் ஆண்டில் முதலாவது சாரண விழாவையும் நடாத்தியதன் பின்னர் சாரணிய இயக்கத்தில் பல்வேறு சாரணர் பிரிவுகளையும் ஆரம்பித்தார். 1920 ம் ஆண்டில் ஒலிம்பியா நகரில் முதலாவது ஜம்போரியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அதே ஆண்டில் லண்டன் மாநகரில் உலக சாரணர் சபையை நிறுவினார். பின்பு கனடாவின் ஒட்டாவா நகரிலும் நிறுவினார். அதன்பின்பாடு தற்போது ஜெனீவா நகரில் அமைந்துள்ள தனது தலைமைக் காரியாலயம் ஓர் உலக சாரணர் சபை (தீலிஷிகி) யாக விரிவடைந்து 5 கண்டங்களுக்குமான 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
1921ம்ஆண்டிலும் 1934ம் ஆண்டிலுமாக இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்தார் பேடன் பவல். அவரது சிந்தனையின் வடிவமான சாரணர் இயக்கம் 1912ம் ஆண்டில் எமது நாட்டில் உருவாக்கம்பெற்று கொழும்பில் 1957ம் ஆண்டில் முதலாவது உலக ஜம்போரியும் நடைபெற்றது. சாரணியத்தின் தார்ப்பரியம் உணரப்பட்டதன் காரணமாக இதேயாண்டில் பாராளுமன்ற 13ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் சாரணர் சங்கம் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவும் நிறுவப்பட்டது.
‘சாரணியத்தினூடாக கல்வி’ என அமைந்துள்ள சாரணியத்தின் செயற்பாடுகள் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கப்பால் நல்ல பல பண்புகளை இளம் வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள சாரணர் பாசறைகளும், ஒன்றுகூடல்களும் வழிகாட்டுகின்றன. சிறப்பான கல்வியை பெறுகின்ற மாணவர்களாக மாற்றி வருகின்ற சக்திமிக்கதோர் அமைப்பாகவும் சாரணியம் அமைந்துள்ளது.

வெறும் புத்தகக் கல்வியினால் பயனேதுமில்லை. செயற்பாட்டுடனான தேர்ச்சிமையக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இன்றைய கல்விப் புலத்தில் சாரணியத்தின் வேரூன்றலானது முக்கியத்துவமிக்கதாய் உணரப்பட்டுள்ளமையினால் சாரணியத்தில் மாணவர்கள் பெறுகின்ற உயர் விருதான ஜனாதிபதி விருது கிடைக்கின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு பல்கலைக்கழக நுழைவுக்கு துணைபுரியவும் சாரணியம் உதவுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியை தலைவராக கொண்டமைந்துள்ள இலங்கை சாரணர் சங்கம் மாகாண மட்டத்தில் மாகாண சாரண ஆணையாளர்கள், மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆணையாளர்கள், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உதவி மாவட்ட ஆணையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் பாடசாலைகள் மட்டத்திலும் வெளியிலும் இன்று சாரணிய செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இற்றைக்கு சுமார் 153 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பேடன் பவல் பிரபு தனது அயராத முயற்சியின் பலாபலன் விருட்சமாக உயர்ந்து வளர்வதற்குக் காரணம் சாரணியத்தின் அனைத்து அம்சங்களிலும் மனிதாபிமானம் குடிகொண்டிருப்பதே ஆகும். 1941ல் மறைந்த பவலினது சமூகத்தொண்டினை அரங்கேற்றி சாரணியம் என்றும் வாழ ஸ்தாபகரை நினைவுகூருவோம். எதிர்வரும் 2013ஆம் ஆண்டுக்குள்ளாக ஒரு இலட்சம் சாரணர்களை நாடு பூராகவும் உருவாக்கும் செயற்திட்டத்தை முன்வைத்து தலைமைக் காரியாலயம் இயங்கிவருகின்றது.
புதுப்பொலிவு பெற்று வரு கின்ற இச்சாரணிய அமைப்பில் சரியான திட்டமிடல் நேரமுகாமை, கட்டளைக்கு கீழ்படிகின்ற தன்மை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றதனால்தான் காலத்திற்கேற்றவாறும் வீறுநடை போடுகின்றது இச்சாரணர் இயக்கம்.

No comments:

Post a Comment