Monday, June 20, 2011

கீர்த்தித் திருவகவல்



தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியுங
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக
கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்
றீண்டு கனகம் இசையப் பெறாஅ
தாண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத்
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில்
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்துந்
தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனிற் சைவ னாகியும்
துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும்
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
மூல மாகிய மும்மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூ ராகவும்
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுட்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்
றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொற்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.
  
பொழிப்புரை :
தில்லையாகிய பழைய நகரில் நிருத்தம் செய்தருளிய திருவடிகளால், பல உயிர்களில் எல்லாம் தங்கிப் பல அருட் செயல்களைச் செய்தவனாகி, அளவில்லாத பல குணங்களோடு அழகு பெற விளங்கி மண்ணுலகிலும், விண்ணுலகிலும் மற்றைய தேவருலகிலும் பொருந்திய கல்வியைத் தோற்றுவித்தும், நீக்கியும், என்னுடைய அஞ்ஞான இருளை முழுதும் ஒழித்தும் அடியாருடைய உள்ளத்தில் அன்பானது பெருக, அதனைக் குடியிருப்பாகக் கொண்ட அருளும் தலைமையும் உடையவனாய், மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை நிலைபெற்ற மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியும், கல்லாடம் என்னும் திருப்பதியில் இனிதாக உமாதேவியோடு, யாவரும் விரும்பும்படி ஒருமித்து எழுந்தருளியிருந்தும், பஞ்சப் பள்ளியென்னும் திருப் பதியில் பால் போன்ற மொழியையுடையவளாகிய உமாதேவி யோடும், குறையாமல் மிகும் இனிய அருள் செய்தும், வேடவுருவத் துடன் முருக்கம்பூப் போன்ற உதட்டையுடைய உமாதேவியின் நெருங்கின அழகான தனங்களாகிய குளத்தில் மூழ்கியும், வலைய ராகிக் கெளிற்று மீனைப் பிடித்து, பெருமை வாய்ந்த விருப்பத்தினை யுடைய ஆகமங்களை அக்கெளிற்றினிடமிருந்து கவர்ந்தும், அவ் வாகமங்களை மகேந்திரமலையில் இருந்து பொருந்திய ஐந்து திரு முகங்களாலும் உபதேசித்தருளியும், நந்தம்பாடி என்னும் திருப் பதியில் வேதியனாய், முடிவற்ற ஆசிரியனாய் எழுந்தருளியும், வெவ் வேறு திருவுருவங்களும் வெவ்வேறு குணங்களும், நூறு இலட்சம் வகையினையுடையனவாகி இடப வாகனத்தையுடைய சிவபெருமான், இவ்வுலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனது இடப் பாகத்தையுடைய உமாதேவியும் தானுமாய் எழுந்தருளி மேல் நாட்டுக் குதிரைகளைக் கொண்டு, அழகு பொருந்த வாணிகக் கூட்டமாய் தானே எழுந்தருளி வந்தும், வேலம்புத்தூர் என்னும் திருப்பதியில் வேற்படையைக் கொடுத்தருளித் தன் திருக்கோலத்தைச் சிறப்பாகக் காணுமாறு செய்த கோட்பாடும், சாந்தம்புத்தூரில் வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்குக் கண்ணாடியில் வாட்படை முதலியவற்றைக் கொடுத்த பயனும், ஓர் அன்பர்க்கு அருளுதற் பொருட்டுக் குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் தோற்பையில், மிக்க நெருப்புத் தோன்றத் தனது உருவத்தை அழகாகக் காட்டிய பழைமையும், திருமாலுக்கும் பிரமனுக் கும் அளவு அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியைக் குதிரை களாகச் செய்த நன்மையும், பாண்டியனை ஆட்கொண்டருள, அப் பாண்டியனுக்குக் குதிரையை விற்று, அதற்கு அவன் கொடுத்த மிக்க பொன்னைப் பெறக் கருதாது, என்னை ஆண்டவனாகிய எம் இறைவனது அருள் வழியையே நான் நாடியிருக்குமாறு அழகு பொருந்திய பாதங்களை, மிக்க ஒளியுடன் காட்டியருளிய பழைமையும், வேதியனாகி, அடியேனை ஆட்கொண்டருளி மாயம் செய்து மறைந்த தன்மையும்; மதுரையாகிய பெரிய நல்ல பெருமை வாய்ந்த நகரத்திலிருந்து, குதிரை வீரனாய் வந்த கோட்பாடும், அந்த மதுரை நகரத்தில் அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு, மற்றவர்களுடன் மண் சுமந்தருளிய விதமும், திருவுத்தரகோச மங்கையிலிருந்து வித்தக வேடம் காட்டிய இயற்கையும், திருப்பூவணத்தில் விளங்கியிருந்தருளி, தூய்மையான அழகிய திருமேனியைப் பொன்னனையாள் என்பவளுக்குக் காட்டிய பழைமையும், திருவாதவூரில் எழுந்தருளி இனிய திருவருள் புரிந்து பாதச் சிலம்பு ஓசையைக் காட்டிய செயலும், அழகு நிறைந்த பெருந்துறைக்கு இறைவனாகி, மேன்மை பொருந்திய ஒளியில் மறைந்த வஞ்சகமும், திருப்பூவணத்தில் இனிதாக விளங்கியருளிப் பாவத்தை அழித்த விதமும், தண்ணீர்ப் பந்தலை வெற்றியுண்டாக வைத்து நல்ல நீரைத் தரும் ஆளாகியிருந்த நன்மையும், விருந்தாளியாகி, திருவெண்காட்டில் குருந்த மரத்தின் அடியில் அன்று வீற்றிருந்த கோலமும், திருப்பட்ட மங்கை என்னும் திருப்பதியில் சிறப்பாய் இருந்து அவ்விடத்தில் அட்டமா சித்திகளை அருளிய விதமும், வேடுவனாய் வந்து வேண்டும் வடிவைக் கொண்டு காட்டில் ஒளித்த வஞ்சகமும், படைகளின் உண்மையைக் காட்டச் செய்து, அதற்கு வேண்டிய வடிவம் கொண்டு மேன்மையுடைய ஒருவனாய்த் தோன்றிய தன்மையும், ஓரியூரில், இனிதாக எழுந்தருளி, பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும், பாண்டூரில் மிக இருந்தும், தேவூருக்குத் தென்திசையில் விளங்குகின்ற தீவில் அரசக் கோலம் கொண்ட கோட்பாடும், தேன் பொருந்திய மலர்ச் சோலை சூழ்ந்த திருவாரூரில் ஞானத்தைக் கொடுத்த நன்மையும், திருவிடைமருதூரில் மிக இருந்து பரிசுத்தமான திருவடியை வைத்த அந்தத் தன்மையும், திருவேகம்பத்தில் இயற்கையாய் எழுந்தருளி யிருந்து பெண்ணை இடப்பாகத்தில் கொண்ட தன்மையும், திரு வாஞ்சியம் என்னும் தலத்தில் சிறப்புப் பொருந்த எழுந்தருளி மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருந்த விதமும்;
வீரனாகி, வலிய வில்லைத் தாங்கி, பலப்பல வீரச் செயல் களைக் காட்டிய தன்மையும், திருக்கடம்பூரில் இடமுண்டாக இருந் தும், திருவீங்கோய் மலையில் அழகைக் காட்டியும், திருவையாற்றில் சைவனாய் வந்தும், திருத்துருத்தி என்னும் திருப்பதியில் விருப்பத் தோடிருந்தும், திருப்பனையூர் என்னும் பதியில் விருப்பமுடைய வனாய் இருந்தும், சீகாழியில் திருவுருவினைக் காட்டியும், திருக்கழுக் குன்றத்தில் நீங்காது இருந்தும், திருப்புறம்பயத்தில் பல அறச்செயல் களை அருளிச் செய்தும், திருக்குற்றாலத்தில் அடையாளமாய் இருந்தும், முடிவில்லாத பெருமையையுடைய, நெருப்புப் போலும் உருவத்தை மறைத்து, அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற முதற் பொருளின் உருவம் கொண்டு இந்திர ஞாலம் போல எழுந்தருளி, எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்;
மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோன், எம்மை ஆண்டருளிய தன்மையைச் சொல்லின், வலிமையையுடைய அழகமைந்த திரு மேனியில், திருவெண்ணீற்றுக் கொடியை உயர்த்திக் காட்டியும், பிறவித் துன்பத்தை ஒருங்கே அழிக்கும் இன்பமே ஆறாகத் தந்தருளியும், உமாதேவியின் பாகத்தையுடைய, மிகவும் பெருங் கருணையையுடையவன், நாதமாகிய பெரிய பறை முழங்கி ஒலிக்கக் கண்டும், அன்பர் மனம் களங்கமடையாமல் ஆட்கொண்டருள்வோன் முத்தலை வேலினைக் கைப்பிடித்தருளியும், மூலகாரணமாகிய மும் மலம் நீக்குகிற பரிசுத்தமாகிய திருமேனியில் ஒளிவீசுகின்ற சோதியாய் உள்ளவன், அன்பரிடத்து அன்புடையவனாகிச் செங்கழுநீர் மலர் மாலையைப் பொருத்தமுடையதாக அழகுபெறத் தரித்தும், திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்லையறியப் படாதவன் குதிரையின் மீது ஏறி வந்த விதமும், மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை அன்பர்க்குக் கொடுப்பவன், பாண்டி வளநாடே பழைய இடமாகக் கொண்டும், அன்பு செய்கின்ற அடியவரை மிகவும் மேலான முத்தியுலகத்தில் சேர்ப்பவன், திருவுத்தரகோச மங்கையைத் திருப்பதியாகக் கொண்டும், முதன்மையான மும்மூர்த்திகட்குத் திருவருள் செய்த மகாதேவன் என்பதே திருப்பெயராகக் கொண்டும், அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய பேரின்பமாகிய ஊர்தியைக் கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே மலையாகக் கொண்டும், எப்படிப்பட்ட பெருந் தன்மையையும் எவ்வகைப் பட்டவர் திறத்தினையும் அவ்வத் தன்மைகளால் ஆட்கொண்டருளி, நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த தில்லையுள் அழகு நிறைந்த `அம்பலத்தில் வருக` என்று சொல்லி, பொருந்த அடியேனை இவ்வுலத்திலே நிறுத்தி, அன்று தன்னோடு கூடப்போன அருள்பெற்ற அடியார், தன்னோடு பொருந்த அவரோடு தான் கலந்து மறைந்தருளியும், தன்னைக் கலக்க வாராதவர்களுள் சிலர், தீயில் குதிக்கவும், ஆசை கொண்டு மயக்கம் அடைந்தும், பூமியில் புரண்டு வீழ்ந்து அலறியும், நிற்க, காலால் வேகம் கொண்டு ஓடிக் கடலில் விழ நெருங்கி, `நாதனே! நாதனே!` என்று அழுது புலம்பி, திருவடியை அடைந்தவர்கள் முத்திப்பேறு எய்தவும், பதஞ்சலி முனிவர்க்கு அருள் செய்த மேலான கூத்தனே என்று இதயம் வருந்த நின்று ஏங்கினவர் ஏங்கி நிற்கவும், ஒலிக்கின்ற கயிலாய மலையின் சிறந்த தலைவன் அழகு பெற்ற இமய மலையின் தன்மை வாய்ந்த அழகிய பொன்னினால் செய்யப்பட்டு விளங்குகின்ற தில்லையம்பலத்தினில் நடனம் செய்த, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினையுடைய உமாதேவியோடு காளிக்கும் அருள் செய்த, திருக்கூத்தில், அழகு மிக்க புன்னகையையுடைய எம்பெருமான் தன் திருவடியைச் சரணாக அடைந்த தொண்டர்களுடனே விளங்குகின்ற புலியூரில் எழுந்தருளி இனிதாக எனக்கு அருள் செய்தனன்.

குறிப்புரை :

கீர்த்தித் திருஅகவல் - சிவபெருமானது அருட் புகழைக் கூறுகின்ற சிறந்த அகவற் பாட்டு. இதற்கு, முன்னோர் உரைத்த குறிப்பும், `சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை` என்பதேயாகும்.
சிவபுராணத்துள், சிவபெருமானது திருவருட்பெருமையை, பண்பாக எடுத்துப் போற்றிய அடிகள், இதனுள் அதனைச் செயலாக எடுத்துப் போற்றுகின்றார். அச் செயல் பற்பல இடங்களில், பற்பல காலத்தில், பற்பல வகையில் நிகழ்ந்தனவாம். ஆகவே, இதனுட் கூறப்படுவன பலவும், இறைவனது அருட்டிருவிளையாடல்கள் என்பது பெறப்படும்.
அடிகளது காலப் பழைமையால், இதனுட் குறிக்கப்பட்ட தலங்களுள்ளும், வரலாறுகளுள்ளும் பல, பிற்காலத்தவரால் நன்கு அறிதற்கு அரியவாயின. அதனால், அவற்றை அவரவரும் தாம் தாம் கருதியவாற்றால் பலபடக் கூறிப் போந்தனர். ஆகவே, அவர் கூற்றுக்கள், ஏற்றபெற்றியே கொள்ளப்படும் என்க.
அடி 1-3
``திருவடி`` என்றது, விடாத ஆகுபெயராய், அவைகளையுடைய இறைவன் எனப் பொருள் தந்தது. ``எல்லாம்`` என்றதில், `எல்லாவற்றுக்கண்ணும்` என ஏழாவது விரிக்க. பயிலுதல்- நீங்காது நின்று அருள் புரிதல். இறைவன் புறத்தே தில்லையிலும், அகத்தே நெஞ்சத் தாமரையிடத்தும் நடனம் புரிதலை இங்ஙனம் அருளிச் செய்தார். ``பல்குணம்`` என்றதில், `குணம்` ஆற்றல். அஃது, ``எழில்பெற`` என்றதனோடு முடிந்தது. எழில் பெற - எழுச்சிபெற்று நிற்குமாறு. விளங்கி - தடத்தநிலையில் தூலமாய் நின்று. இவ்வெச்சம், ``தோற்றியும், அழித்தும், துரந்தும்`` என வருவனவற்றோடு முடியும்.
அடி 4-8
``மண், விண்`` என்றது பூதங்களை. கீழும் மேலுமான இவற்றைக் கூறவே, இடை நிற்கும் பூதங்களும் அடங்கின. `வானோருலகு` எனப் பின்னர் வருதலின், இவை மக்களுலகாயின. `கல்வியும்` என, தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்துரைக்க. `சொல்லும், பொருளும்` என இரு கூற்றுலகத்தையும் குறித்தவாறு. என்னை? துணிபுணர்விற்குக் காரணமாய் நிற்கும் சொற்கள் பல வற்றையுமே ஈண்டு` ``கல்வி`` என்றமையின், தோற்றலும், அழித்தலும் கூறவே, இடைநிற்கும் நிறுத்தலும் அடங்கிற்று; எனவே, `முத்தொழில்களைச் செய்து` என்றவாறாயிற்று. இருள் - ஆணவமலம். `இவ்வாற்றானே இருளைத் துரந்து` என்றபடி. எனவே, `இறைவன் முத்தொழில் செய்தல், உயிர்களின் இயற்கை மலமாகிய ஆணவத்தைத் தொலைத்தற் பொருட்டு` என்பது போந்தது.
சொன்னஇத் தொழில்கள் என்ன
காரணந் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட் டென்று
மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி
வழங்கவும், அருளால் முன்னே
துன்னிய மலங்க ளெல்லாம்
துடைப்பதும் சொல்ல லாமே.
என்னும் சிவஞான சித்தியைக் காண்க (சூ. 1.36).
சொற்பல்காமைப் பொருட்டுச் சுருங்க ஓதினாராயினும், `என்னுடை இருளை ஏறத்துரந்து என் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்` எனவும், `ஏனை அடியார் பலருடைய இருளையும் ஏறத் துரந்து அவர் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்` எனவும் வகுத்துரைத்தல் கருத்தென்க. இவ்விரண்டினையும் இத்திருப்பாட்டுள் எடுத்தோதுதல் காண்க.
ஏற - கடைபோக; முற்றிலும். மீதூர்தல் - மேன்மேல் வளர்தல். `அவற்றைக் குடியாக்கொண்ட` என்க. குடி - குடியிருக்கும் இடம். கொள்கை - கோட்பாடு. சிறப்பு - மேன்மை. `கொள்கை சிறப்பு` என்ற இரண்டும், முறையே, காரணப் பெயராயும், காரியப் பெயராயும் நின்று, ``கொண்ட`` என்ற பெயரெச்சத்திற்கு முடிபாயின. இதனால், இறைவன் உயிர்கள் பொருட்டுச் செய்யும் திருவிளையாடல்களைத் தொகுத்துக் கூறியவாறு.
அடி 9-10
``சொன்ன ஆகமம்`` என்றதை முதலிற் கூட்டி, `முன்னர்ப் பிரணவர் முதலியோர்க்குச் சொன்ன ஆகமங்களை` என உரைக்க. சுத்த புவனத்திற் சொல்லப்பட்டவற்றை நிலவுலகத்திற் புலப்படுத்தினமையின், ``தோற்றுவித்து`` என்றருளினார். `எழுதுவிக்கப்பட்டன` என்பதும் இதனானே கொள்க. என்னை? தோற்றுவித்தல் என்பது, `கட்புலனாம்படி செய்தல்` எனவும் பொருள் தருமாகலின், எழுதினோர் சிவகணத்தவர் எனக் கொள்ளப்படும்.
`மகேந்திரமலை வடக்கின்கண் உள்ளது` என ஒரு சாராரும், `தெற்கின்கண் உள்ளது` என மற்றொரு சாராரும் கூறுப. அடிகள் தென்னாட்டில் நிகழ்ந்தவற்றையே அருளிச் செய்தலின், தெற்கின்கண் உள்ளதெனக் கோடலே பொருந்துவதாம். இப் பெயருடைய மலை தெற்கின்கண் உள்ளதென்றே இராமாயணத்தாலும் அறிகின்றோம். ``மன்னு மாமலை`` என்றதனால், அது சிறப்புடைய மலையாதல் விளங்கும்
அடி 11-12
கல்லாடம், ஒருதலம், கலந்து - வெளிப்பட்டு நின்று. நல்லாள், உமையம்மை. நயப்பு உறவு - மகிழ்ச்சியுறுதல்; அஃதாவது, `சினந்தணிதல். மகேந்திரமலையில் தோற்றுவித்தருளிய ஆகமங்களை இறைவன் உமையம்மைக்கு அவ்விடத்தே அறிவுறுத்த, அவள் அவற்றை விருப்பமின்றிக் கேட்டாள்; அதனாற் சினங்கொண்ட இறைவன், நீ ஈங்கிருக்கற்பாலையல்லை எனக் கடிந்து நீக்க, அவள், `கல்லாடம்` என்னும் தலத்தில் சென்று தன் பிழை நீங்க இறைவனை வழிபட்டாள்; அவ் வழிபாட்டினால் மகிழ்ந்த இறைவன் அங்கு அம்மைமுன் வெளிப்பட்டுத் தனது மகிழ்ச்சியைப் புலப்படுத்தி, நின் பிழையைப் பொறுத்தோம் என்று அருள்செய்தான்` என்பது இவ்வடிகளால் கொள்ளத்தகும் வரலாறு.
அடி 13-14
பஞ்சப்பள்ளி, ஒருதலம். பால்மொழி, உமையம்மை. எஞ்சாது ஈண்டும் இன்னருள் - பிரியாது அணுகியிருக்கும் வரம். விளைத்து - கொடுத்து.
அம்மை கல்லாடத்தில் வழிபட்டுக் குற்றம் பொறுத்தருளப் பெற்ற பின்னர்ப் பஞ்சப் பள்ளியில் வழிபட, இறைவன் ஆங்குத் தோன்றியருளியபோது, அம்மை இறைவனோடு நீங்காது உறையும் வரத்தினை வேண்டுதலும், இறைவன் அம்மையை, `வலைஞர் மகளாய்ச் சென்றிரு; பின்னர் வந்து மணம் புரிதும்` என்று அருளினான் என இங்குக் கொள்ளற்பாற்று. குற்றம் பொறுத்த பின்பும் அம்மையை வலைஞர் மகளாகச் செல்லப் பணித்தது, அது முற்றும் நீங்குதற்கு. இனி வலைஞர் தலைவனது தவமே இதற்குச் சிறந்த காரணம் என்க.
அடி 15-16
வேடனைக் குறிக்கும் `கிராதன்` என்னும் வடசொல், `கொல்லும் தொழிலுடையவன்` என்னும் பொருளையுடைய தாதலின், இங்கு அத்தொழிலையுடைய வலைஞனுக்குக் காரணக் குறி யாயிற்று. ``மீன்வலை வீசிய கானவன்`` (தி.8 திருப்படையாட்சி-1) எனப் பின்னும் அருளுவர்.
``கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்``
(-சிலப்.புகார். கானல் -17)
என வலைஞர்களது கொலைத் தொழிலைச் சிலப்பதிகாரமும் கூறுதல் காண்க. கிஞ்சுகம் - முள்முருக்கு; அதன் பூப்போலும் வாயவள், உமையம்மை. விராவு - நெருங்கிய. தடம் - பொய்கை. இன்பம் பற்றி வந்த உருவகம். வலைஞர் மகளாய்ச் சென்று வளர்ந்திருந்த அம்மையை இறைவன் ஓர் வலைஞனாய்ச் சென்று மணந்து அவளோடு கூடி இன்புற்றனன் என்பது இதனுட் குறிக்கப்பட்ட வரலாறு.
இதற்கு இவ்வாறன்றி, பார்த்தனுக்கு வேடனாய்ச் சென்று அருள் புரிந்த வரலாற்றைப் பொருளாகக் கூறின், அதனைக் கூறாமையிற் குன்றக் கூறலும், கிஞ்சுக வாயவளோடு இன்புற்றமையை விரித்தோதினமையின், மற்றொன்று விரித்தலுமாகிய குற்றங்கள் தங்கும் என்க. இவ்வரலாறு, அடுத்து வரும் வரலாற்றின் பின்னர்க் கூறற்பாலதாயினும், அம்மைக்கு அருள் புரிந்தவற்றோடு ஒருங்கு இயைதற்பொருட்டு இதனை முன்னரும், ஆகம வரலாறுகள் தம்முள் ஒருங்கியைய, அடுத்து வருவதனை இதன் பின்னரும் அருளினார் என்க.
இத்துணையும், உமையம்மைக்கு அருள்புரிந்த திருவிளை யாடல்களாம்.
அடி 17-18
கேவேடர் - வலைஞர். `கேவேடருள்` என உருபு விரித்து, `வலைஞருள் ஒருவனாய்ச் சென்று` என உரைக்க. ``கெளிறு`` என்றது இங்கு அப்பெயருடைய மீனை உணர்த்தும் சிறப்புப்பொருள் தாராது, `மீன்` என்னும் பொதுப்பொருளே தந்து, சுறாமீனைக் குறித்தது. மா ஏட்டு ஆகிய ஆகமம் - பெரிய சுவடிக்கண் பொருந்திய ஆகமங்கள்.
இறைவன் மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து ஆகமங்களைச் சுவடிகளாக்கி வைத்தபின்னர், அவற்றின் பொருளை அம்மைக்கு விளக்கத் திருவுளங்கொண்டு அவளுடன் தனிமையில் இருந்து, `ஈண்டு யாரையும் புகவிடாதி` என நந்தி பெருமானுக்கு ஆணையிட்டு, அம்மைக்கு ஆகமப் பொருளை விளக்கி வருங்கால், அம்மை அவற்றை விருப்பின்றிக் கேட்டிருந்தாள்; அதனால் வெகுண்ட இறைவன் அவளைத் தன்பால் நில்லாது நீங்கச் செய்தான். இதனையறிந்த முருகப் பெருமான், சீற்றங் கொண்டு, நந்தி தேவரது தடைக்கு அஞ்சாது உட்புகுந்து, ஆகமச் சுவடிக் குவியல் முழுவதையும் தமது பன்னிருகைகளாலும் ஒருசேர வாரியெடுத்துக் கடலிற் புக எறிந்தார். அதனால், இறைவன் அவரை, `நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிறக்க` எனவும், நந்திதேவரை, `நீ கடலில் சுறாமீனாகி அலைக` எனவும் வெவ்வுரை கூற, முருகப் பெருமான் மதுரையில் `உப்பூரி குடி` கிழானாகிய வணிகனுக்கு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறந்திருந்தார். உருத்திரனால் (சிவபெருமானால்) பெற்ற சன்மத்தை (பிறப்பை) உடைமையால், அப்பிள்ளையை, `உருத்திர சன்மன்` என்பர்.
நந்திதேவர் கடலிற் சுறாமீனாகி முருகப் பெருமானால் எறியப்பட்ட ஆகமச் சுவடிகள் அனைத்தையும் வைத்துக் காத்துக் கொண்டு வலைஞர்களுக்கு அகப்படாது திரிந்து அவர்களை அலைத்துவர, அம்மை, மேற்கூறியவாறு கல்லாடத்திலும், பஞ்சப்பள்ளியிலும் இறைவனை வழிபட்டு வலைஞர்கோன், மகளாய்ச் சென்று வளர்ந்து மணப்பருவம் எய்தியிருக்க, முன்னர்க் குறித்த சுறாமீனைப் பிடித்துக் கொணர்வோருக்கு அவளைக் கொடுப்பதாக வலைஞர்கோன் அறிவித்தான். வலைஞர் மைந்தர் ஒருவரும் அச்சுறாமீனை அகப்படுத்த மாட்டாராய் இருப்ப, இறைவன் தானே ஒரு வலைஞர் மகனாய்ச் சென்று சுறாமீனை வலையுட் படுத்துக் கொணர்ந்தான். நந்தி தேவர் முன்னையுரு வெய்தி, ஆகமச் சுவடிகளை இறைவன் முன் வைத்து வணங்கினார். உண்மையையுணர்ந்து, வலைஞனாய் வந்தவர் சிவபெருமானே என்றும் அறிந்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் இறைவன் அம்மையை மணந்து கொண்டு மகேந்திரமலைக்கு எழுந்தருளினான். முருகப் பெருமான் உருத்திரசன்மராய், சங்கத்தார்க்கு உதவியிருந்து, முன்னை நிலை எய்தினார். இவையே, ``கல்லாடத்துக் கலந்தினி தருளி`` என்றதுமுதல் இதுகாறும் வந்த அடிகளில் குறிக்கப்பட்ட வரலாறுகள் என்க. இவற்றைத் திருவிளையாடற் புராணம் சிற்சில வேறுபாடுகளுடன் கூறுமாயினும், ஆளுடைய அடிகளது திருமொழியாற் கொள்ளத்தக்கன இவையே எனக் கொள்க.
அடி 19-20
மற்று, வினைமாற்று. அவைதம்மை - அந்த ஆகமங்களை. சிவபெருமானது - திருமுகங்கள் ஐந்து, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம்` என்பன.
காமிகம் முதல் வாதுளம் ஈறாக உள்ள சிவாகமங்கள் இருபத்தெட்டினையும் பிரணவர் முதலிய இருபத்தெண்மருக்கும் சிவபெருமான் ஒரோவொருவர்க்கு ஒரோ ஒன்றாக இவ்வைந்து திருமுகங்களானும் அருளிச் செய்தான்; அவற்றுள் முதற் பத்து ஆகமங்களையும் முன்னர்க் கேட்டவர்பால், ஒருவர் வழி ஒருவராக ஒரோவொன்றை மற்றும் இருவர் கேட்டனர். இங்ஙனம் இப்பத்து ஆகமங்களையும் கேட்ட முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலின் இவை சிவபேதம் என்னும் பெயருடையவாயின. ஏனைப் பதினெட்டு ஆகமங்களையும் முன்னர்க் கேட்டவர்பால் ஒரோவொன்றை மற்றும் ஒரோவொருவர் கேட்டனர். இங்ஙனம் இப்பதினெட்டு ஆகமங்களையும் கேட்ட முப்பத்தறுவரும், `உருத்திரர்` எனப்படுதலின், இவை, `உருத்திர பேதம்` என்னும் பெயருடையவாயின. இங்ஙனம், சிவாகமங்களைக் கேட்டவர் அறுபத்தறுவராகலின், அவரையெல்லாம் ஒருங்கே தொகுத்து,
அஞ்சன மேனி யரிவையோர் பாகத்தன்
அஞ்சோ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
(தி.10 திருமந்திரம் பா.57)
என்று, ஒருபெற்றியராகவே சுருங்க அருளிச் செய்தார் திருமூல நாயனார். இதனையே, அடிகள், ``சொன்ன ஆகமம்``(அடி 10) என மேலே குறித்தருளினார்.
காமிகம் முதலிய பத்து ஆகமங்களையும் சிவபெருமானிடமிருந்து கேட்ட சிவர்கள், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர். இவர்கள் பால் மேற்கூறிய ஆகமங்களை ஒருவர் வழி ஒருவராகக் கேட்ட இவ்விரு சிவர்கள், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சருவருத்திரர், பிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - வீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தர் - விக்கினேசர், சசி` என்போர். இவருள் இவ்விருவர் ஓர் ஆகமத்தை ஒருவர்பால் ஒருவராகக் கேட்டவர் என்பது மறவற்க.
ஏனைப் பதினெட்டாகமங்களையும் சிவபெருமான்பால் கேட்ட உருத்திரர்கள், `அனாதிருத்திரர், தசாருணர், நிதனேசர், வியோமர், தேசர், பிரமேசர், சிவர், சருவோத்தமர், அனந்தர், பிரசாந்தர், சூலி, ஆலயேசர், விந்து, சிவநிட்டர், சோமதேவர், சீதேவி, தேவவிபு, சிவர்` என்போர். இவர் ஒரோவொருவரிடமும் அவ்வாகமங்களைக் கேட்ட ஒரோ ஒருவர் முறையே, `பரமேசர், பார்ப்பதி, பதுமபூ, உதாசனர், பிரசாபதி, நந்திகேசர், மகாதேவர், வீரபத்திரர், பிருகற்பதி, தசீசி, கவசர், இலளிதர், சண்டேசர், அசம்பாதர், நிருசிங்கர், உசனர், சம்வர்த்தர், மகாகாளர்` என்போர். இவரெல்லாரும், `விஞ்ஞானகலர்` எனப்படுதலின், இவர்கள் கேட்டனவெல்லாம் சுத்தமாயாபுவனத்திலேயாம். இவ்வாகமங்களையே நிலவுலகில் இறைவன் மகேந்திரமலையில் வெளிப்படுத்திச் சுவடிகளாக்கினன் என அடிகள் மேல் (அடி.10) அருளிச் செய்தார் என்க. விஞ்ஞான கலராகிய அறுபத்தறுவருட் சிலரைப் பெயரொற்றுமை பற்றிப் பிறராக நினையற்க.
சிவபிரானது படைத்தல் முதலிய ஐவகை ஆற்றல்களே அவனது சத்தியோசாதம் முதலிய ஐந்து திருமுகங்களாகும். அவற்றுள் சத்தியோசாத முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்` என்னும் ஐந்துமாம். இவை, கௌசிக முனிவருக்குச் சொல்லப்பட்டன. வாமதேவ முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள், `தீர்த்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிர பேதம்` என்னும் ஐந்துமாம். இவை, காசிப முனிவருக்குச் சொல்லப்பட்டன. அகோர முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள் `விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம்` என்னும் ஐந்துமாம். இவை, பாரத்துவாச முனிவருக்குச் சொல்லப்பட்டன. தற்புருட முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள், `இரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம்` என்னும் ஐந்துமாம். இவை, கௌதம முனிவருக்குச் சொல்லப்பட்டன. ஈசான முகத்தாற் சொல்லப் பட்ட ஆகமங்கள், `புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம்` என்னும் எட்டுமாம். இவை, அகத்திய முனிவருக்குச் சொல்லப்பட்டன. சுத்தமாயா புவனத்தில் பிரணவர் முதலிய அறுபத்தறுவர்க்குச் சொன்ன ஆகமங்களை, இங்ஙனம், மகேந்திரத்தில் ஐந்து திருமுகங்களால் ஐந்து முனிவர்கட்கு இறைவன் பணித்தருளினான் என்க. இம்முனிவர் ஐவரும் இல்லறத்தவராய் இருந்து தம் தம் குடி வழிகளில் தாம் தாம் கேட்ட ஆகம நெறிகளை நிலவுலகிற் பரவச் செய்தனர். இவர்தம் குடிவழிகள் முறையே, சிவ கோத்திரம், சிகா கோத்திரம், சோதி கோத்திரம், சாவித்திரி கோத்திரம், வியோம கோத்திரம் எனப் பெயர் பெற்று விளங்கின. இங்ஙனம் ஐம்முகங்களாலும் ஐவருக்கு எல்லா ஆகமங்களையும் சொல்லி முடித்தபின்பு திருக்கயிலையில் இவைகளை உமையம்மைக்குச் சொல்ல, அவற்றை அவள் முன்போல இல்லாமல் ஆர்வத்துடன் கேட்டு, அவற்றின் முறைப்படியே இறைவனைக் காஞ்சியம்பதியில் வழிபட்டாள் என்பதையே சேக்கிழார்,
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
(தி.12 திருக்குறிப்புப் புரா. 50)
என்பது முதலாகக் கூறுகின்றார் எனக் கொள்ளற்பாற்று.
``நவ ஆகமம் எங்கள் நந்திபெற் றானே`` (தி.10 திருமந்திரம். 62) எனத் திருமூலர் அருளியது, அம்மைக்கு எல்லா ஆகமங்களையும் சொல்லிய பின்பு, அவற்றுள் ஒன்பது ஆகமங்களையே இறைவன் நந்தி பெருமானுக்குச் சொன்னான் என்பதைக் குறிப்பதாகும். அவ்வொன்பது ஆகமங்கள் இவை என்பதை,
பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. -தி.10 திருமந்திரம்.63
என்ற திருமந்திரத்தால் அறியலாகும். எனினும், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடியின் பாடம் திரிபுடையது என்பர். என்னையெனின், அதனுட் கூறப்பட்ட யாமளம் மூலாகாமங்கள் இருபத்தெட்ட னுட்பட்டது அன்றாதலின். நந்தி தேவர் கேட்ட ஆகமங்கள் ஒன்பது என்பதற்கேற்ப, திருமந்திரம் ஒன்பது தந்திரமாக அருளிச் செய்யப்பெற்றமை கருதற்பாலது.
ஆகமங்கள் இறைவனால் சுத்தமாயா புவனத்தில் தோற்று விக்கப்பட்டுப் பிரகிருதி புவனத்திற்கு வந்த வரலாற்றை,
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமேசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. -தி.10 திருமந்திரம் 62
எனக் கூறுகின்றது.
இனி,
``அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்``
-தி.10 திருமந்திரம். பா.60
என்றாற்போல ஆகமங்களை அளவிலவாகக் கூறுதல், அவற்றின் பொருளைப் பற்பல காலங்களில் பற்பலருக்கு விளக்கிய உபாகமங்களையாம். திருமூலர், மூலாகமங்களை, `இருபத்தெட்டு` என வரையறுத்தருளிச் செய்தது போல, உபாகமங்களை, `இரு நூற்றேழு` என வரையறுத்தருளிச் செய்யாமையறிக. இனி இதனை, `ஆகமங்களிற் போந்த கிரந்தங்களை அளவில எனக் கூறியது` என்றலுமாம்.
இவற்றின் பின்னர்,
மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்தே
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-தி.10 திருமந்திரம். பா.65
எனத் திருமூலர் அருளியது, ஆகமங்களின் பொருளை மக்கட்கு விளங்கச் செய்தற் பொருட்டே, `ஆரியம், தமிழ்` என்னும் இருபெரு மொழிகளும் தோற்றுவிக்கப்பட்டன என்றவாறாம்.
``வார்பனி`` என்றது, பகுத்துணர்வோடு கூடாத புலனுணர்வை. ``ஏரி`` என்றது நிறைந்த ஞானத்தை. ஆரியமும், தமிழும் சிவாகமப் பொருளையே சிறந்தெடுத்துக் கூறும் என்பதனை,
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும்; அதனை உணரலு மாமே. -தி.10 திருமந்திரம்.66
என்று அவர் இனிது விளங்க அருளிச் செய்தார்.
``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர``
(தி. 1. ப.77 பா.4) என்ற ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியும் இங்கு நினைக்கத் தக்கது. ``ஆரியமும் தமிழும் உடனேசொலி`` (தி.10 திருமந்திரம். 65) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற்போலச் சிலவிடங்களில் ஆரியத்தை முன் வைத்தும், ``தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்`` (தி.10 திருமந்திரம். 66), ``தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழற்சேர (தி.1 ப.77 பா.4) என்றாற் போலச் சிலவிடங்களில் தமிழை முன்வைத்தும் அருளிச் செய்தலின், அவ்விருமொழியும் ஒப்ப உயர்ந்தனவாகவே உயர்ந்தோர் தழுவினர் என்பது பெறப்படும். படவே, அவற்றுள் ஒன்றனையே உயர்ந்தோர் மொழியெனக் கொண்டு, பிறிதொன்றனை அன்னது அன்றென இகழ்தல் கூடாமை அறிக.
இவ்விரண்டினாலும், ஆகமத்தை நிலவுலகில் நெறிப்பட வழங்குவித்தமை அருளியவாறு.
அடி 21-22
`நந்தம் பாடி` என்பது, சாத்தங்குடி, கொற்றங்குடி முதலியனபோல, `நந்தன் பாடி` என்பதன் மரூஉவாதல் வேண்டும். பின்னர், `வேலம் புத்தூர்` என வருவதும், அன்னது. இப்பெயருடைய தலம் இஞ்ஞான்று அறியப்படாமையின், இதன்கண் இறைவன் நான்கு வேதங்களையும் முற்ற ஓதி உணர்ந்த வேதிய வடிவத்துடன், அவ் வேதங்களைச் செவ்வனே ஓதுவித்துப் பொருள் உணர்த்தும் ஆசிரியனாய் எழுந்தருளிய வரலாறும் அறியப்படவில்லை. இறைவன் மதுரையில் வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த ஒரு திருவிளையாடல், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திற் காணப்படுகின்றது. இது, வேதத்தை விளங்கச் செய்தமை அருளியவாறு.
அடி 23-26
``இயற்கை`` என்றது, செயலை. நூறு நூறாயிரம் - கோடி; இஃது அளவின்மை குறித்து நின்றது. ``இயல்பினது`` என்றது, பன்மை ஒருமை மயக்கம். ``இயல்பினவாகி`` என்பதே, பாடம் எனல் சிறப்பு. ``ஆகி`` என்றதன்பின், `நிற்ப` என்பதும், ``உய்ய`` என்றதன் பின், `கொள்ள` என்பதும் எஞ்சி நின்றன.
``சொன்ன ஆகமம்`` என்பது முதலாக இதுகாறும் வந்தவற்றுள் உள்ள, `தோற்றுவித்தருளியும், எய்தியும், விளைத்தும், படிந்தும், வாங்கியும், பணித்தருளியும், அமர்ந்தருளியும், இயல்பினதாகி நிற்ப, உய்யக்கொள்ள` என வந்த வினையெச்சங்கள், ``வந்தருளி`` என்ற எச்சத்தோடே முடிந்தன. ஆகவே, ``வந்தருளி`` என்றது, `இங்ஙனம் வந்தருளி` என மேற்போந்த செயல்களையே குறித்ததாயிற்று. அவை அனைத்திலும் இறைவன் அம்மையோடு உடனாய் நின்றமையறிக. ``தோற்றுவித்தருளியும்`` என்றது முதலாக உம்மைகொடுத்து அருளிச் செய்து, ``வந்தருளி`` என வாளா அருளினமையின் அவ்வெச்சங்கள் இவ்விடத்து முடிந்து நிற்கப் படுபொருளே பொருளாம் என்பது விளங்கும். ஆகவே, இவை மிகப் பழைய வரலாறுகள் என்பது உணரப்படும். அதனால், இதன்பின், `பின்னர்` என வேறெடுத்துக் கொண்டு உரைக்கப்படும்.
அடி 27-28
இதுமுதலாகப் பாண்டியன் பொருட்டுச் செய்யப் பட்ட அருள்விளையாடலை அருளுகின்றார். குடநாடு - மேற்கே உள்ள நாடு என்றது, பாண்டியன் நாட்டினையே. அதனை இங்ஙனங் கூறியது, திருப்பெருந்துறையிலிருந்து வருபவர்போல வந்தமையைக் குறித்தற்கு. சதுர்பட - திறமை தோன்ற. திறமை - குதிரையை நடத்துதற்கண் உள்ளது. சாத்து - வணிகக் கூட்டம். இறைவன், அடிகள் பொருட்டுச் சிவகணங்களைக் குதிரை வாணிகர்களாகக் கொண்டு, தான் அவர்கட்குத் தலைவனாய் நெடுந்தொலைவிலிருந்து காணப் பட்டு வந்து மதுரையில் பாண்டியனிடம் பல குதிரைகளைக் கொடுத்துச் சென்ற வரலாறு பலவிடங்களிலும் சொல்லப்படுவதே. ``எழுந்தருளியும்`` எனச் சுருங்க அருளினாராயினும், பின் வருவன வற்றோடு இயையுமாறு, `எழுந்தருளிய அருளும்` என உரைக்க.
அடி 29-30
வேலம் புத்தூர், `வேலன் புத்தூர்` என்பதன் மரூஉ முடிபு. இப்பெயர், முருகக்கடவுளோடு இதற்கு உள்ள தொடர்பு பற்றி வந்ததாகலாம். `வேலம் புத்தூரின்கண்` என ஏழாவது விரிக்க. விட்டேறு - வேற்படை. ``பொருவேடற்கு`` எனப் பின்னர் வருகின்ற குறிப்பு, இதற்கும் பொருந்துவதாம். ஆகவே, இத்தலத்தில் வேல் வல்ல வீரன் ஒருவனுக்கு இறைவன் வேற்படை வழங்கி அவன் வாயிலாகப் பாண்டியனுக்கு வெற்றியுண்டாகச் செய்தனன் என்பது பெறுதும். இவ்வாறன்றி இதனைத் திருவிளையாடற் புராணங்கள் கூறும் உக்கிரகுமார பாண்டியர் வரலாற்றோடு இயைத்துரைத்தற்கு, அடிகள் வாக்கில் காணப்படுவதொரு குறிப்பும் இல்லை.
கோலம் பொலிவு - தனது அருட்கோலம் விளங்குதல். சொற்பொருள் இவ்வாறாயினும், `பொலிதலை யுடைய கோலத்தைக் காட்டிய` என்பதே கருத்தாகக் கொள்க. கொள்கை, விளைவு முதலியனவாக இங்கு வருவன பலவும், செயலையே குறிப்பன என்க.
அடி 31-32
`கண்ணாடி` என்னும் பொருளதாகிய, `தர்ப்பணம்` என்னும் ஆரியச் சொல், `தற்பணம்` எனத் திரிந்து நின்றது. குறிற்கீழ் ரகாரத்தை உடைய ஆரியச் சொல் தமிழில் வருங்கால், அதன்மேல் உகரம் பெற்று, `தருப்பணம்` என்றாற் போல வருதலே பெரும்பான்மையாயினும், அம்மெய்யெழுத்து, பின்னர் வல்லொற்றோடு கூடி ஈரொற்றாய் நிற்கும் இடங்களில் தமிழில், செய்யுளில், ஏற்குமிடத்தில் வல்லின றகரமாய்த் திரிந்து, `தற்பணம்` என்றாற்போல ஓரொற்றாய் நிற்றலும் பலவிடங்களிற் காணப்படுவதாம். இங்கு, ``விற்பொரு வேடற்கு`` என்ற எதுகையையும் நோக்குக. இவ்வாறன்றி ஆரியத்தில் உள்ளவாறே தர்ப்பணம் என ஓதுதல் கூடாமையறிக. `சாத்தம் புத்தூர்` என்பதே பாடமாதல் வேண்டும். இப்பெயர், அரிகர புத்திரராகிய மாசாத்தனாரோடு இத்தலத்திற்கு உண்டாகிய தொடர்பு பற்றி வந்ததாகலாம். வேடன் - மறவன். பொருவேடன் - போர் புரியும் மறவன்; வீரன். `இவனுக்கு வில் ஈந்த விளைவும்` என்க. வேலம் புத்தூரில் வேல் வீரன் ஒருவனுக்கு நேரே தோன்றி வேல் கொடுத்தருளியது போல, சாத்தம் புத்தூரில் வில்வீரன் ஒருவனுக்குக் கண்ணாடியில் தீட்டப்பெற்றிருந்த வண்ண ஓவியத்தில் நின்று இறைவன் வில் வழங்கினான் என்பது பெறுதும். `வில்` எனினும், அம்புப் புட்டிலும் உடன் கொள்ளப்படுவதேயாம். இவனாலும் பிறிதொருகால் இறைவன் பாண்டிய மன்னனுக்கு வெற்றியுண்டாகச் செய்தான் என்க. இவையெல்லாம் பிற்காலத்தில், யானை எய்த திருவிளையாடல், நாகம் எய்த திருவிளையாடல் முதலியவற்றில் சிறிது சிறிது இயைபுபட்டுத் தோன்றுவவாயின.
அடி 33-34
மொக்கணி - குதிரை வாயில் கொள்ளுக் கட்டும் பை. அருணகிரிநாதரும், ``சர்க்கரை மொக்கிய (கந்தர் அலங்காரம் - காப்புச் செய்யுள்). என, வாய் நிறைய இட்டுக் குதட்டுதலை, `மொக்குதல்` என்றார். `தழல்போலும் மேனி` என்க. சொக்கு - அழகு; அது, விடாத ஆகுபெயராய், சொக்கலிங்க மூர்த்தியைக் குறித்தது. காட்டுதல் - தெளிவித்தல். `குதிரை வாணிகனாய் வந்த கோலத்தைச் சொக்கலிங்கத்தின்கண் உளதாகப் பின்பு பாண்டியனுக்குத் தெளிவித்த பழைமையும்` என்றபடி. பழைமை - பழைய தொடர்பான செயல். எனவே, `இவையெல்லாம் நம்மாட்டு உள்ள கருணையால் சிவபெருமானே செய்தருளினான்` எனப் பாண்டியன் பின்னர் உணர்ந்து வியந்து, அப்பெருமான்பால் அன்பு மீதூரப் பெற்றான் என்க. இவ்வாற்றால் வேலம்புத்தூர் முதலிய தலங்களும், பாண்டியன் நாட்டின்கண் உள்ளனவாதல் பெறப்பட்டது. முதற்கண் குறித்த குதிரை வாணிகனாய் வந்தது ஒன்றையே இங்கு மீள எடுத்தோதினாராயினும், ஏனைய அருள் விளையாடல்களும் கொள்ளப்படும். இனி, ``மொக்கணி`` என்றதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இதுகாறும் பாண்டியனுக்கு அருள் புரிந்தமை அருளியவாறு. இனித் தமக்கு அருள் செய்தவாற்றைக் கூறுவார்.
அடி 35-36
இறைவன் அடிகள் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த வரலாறு நன்கறியப்பட்டது. இது மேல், சாத்தாய் எழுந்தருளியது எனக் குறிக்கப்பட்டதின் வேறன்றாயினும் அங்குப் பாண்டியன் முன் வந்து தோன்றிய திருவருளையும், இங்குத் தம்மைக் காக்க நினைந்து செய்த திருவருளையும், குறித்தற்கு வேறுவேறாக அருளிச் செய்தார் என்க.
அடி 37-41
இங்கும், ``திருவடி`` என்றது, `அதனையுடையவன்` என்றே பொருள் தந்தது. `விற்று` எனின், அகவலடி இனிது நிரம்பாமையின் `விற்றும்` என்பதே பாடம் போலும். ஈண்டு கனகம் - மிகுந்த பொன். இசையப் பெறாது - நேர்தல் பெறாமையால். தூண்டு சோதி - மிக்க ஒளிவடிவினனாகிய அவ்விறைவன். தோற்றியது, பாண்டியன் முன் தோன்றி அடிகள் கொணர்ந்த பொன்னை எல்லாம் தானே ஏற்றுக்கொண்டமையை உணர்த்தி, அவரைத் தம் விருப்பப்படி செல்லுமாறு விடப்பணித்தது என்க. இதனையும், ``தொன்மை`` என்றார், முன்பு ஆண்ட கருணையை விடாது செய்தமை பற்றி. `என்னை ஆண்டுகொண்டருளுதற் பொருட்டுப் பரிமாவிற்றும் கனகம் ஈடுசெய்யப் பெறாமையால் வருந்தி யான் அருள்வழி இருப்ப, அவன் தோற்றிய தொன்மையும்` என்க. இசையப் பெறாமை குதிரைகள் நரிகள் ஆனமையாலாம். குதிரைகள் பின்பு நரிகளாயின என்பது, `நரியைக் குதிரையாக்கிய நன்மையும்` என மேலே கூறியதனால் அறியப்பட்டது. என்னை, அவை அங்ஙனம் ஆகாதிருப்பின், நரியைக் குதிரையாக்கியது அறியப்படுமாறில்லையாகலின். ``நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்`` என ஈண்டு அடிகள் அருளிச் செய்தவாற்றால், அன்னதொரு திருவிளையாடல் நிகழ்ந்ததில்லை என்பாரது கூற்றுப் பொருந்தாமை விளங்கும்.
அடி 42-43
``அருளி`` என்றது, `அருளினவன்` எனப் பெயரா யிற்று, `இவ்வாறெல்லாம் இந்திர ஞாலங் காட்டிய` என்க. `சாலம்` என்றாகற்பாலது, `ஞாலம்` என்றாயிற்று. இந்திர சாலம் - பெரிய மாயவித்தை. அஃது, அதுபோலும் பல அருள் விளையாடல்களைக் குறித்தது.
அடி 44-45
மதுரையில் குதிரைச் சேவகனாய் வந்தது, `சௌந்தர சாமந்தன்` என்னும் அமைச்சன் பொருட்டு எனப் பரஞ்சோதியார் திருவிளையாடல் கூறும்.
அடி 46-47
``ஆங்கது`` என்றது ஒருசொல் நீர்மைத்து. `அடியவள் வந்தியென்னும் பெயருடையாள்` எனக் கூறப்படுவதும் அவள் பொருட்டாக இறைவன் மண் சுமந்த வரலாறும் பலரும் அறிந்தவை. பாங்கு - செம்மை. செம்மையாய் மண் சுமந்தது, வந்தியின் பங்குக் கரையை நன்கு அடைத்தே சென்றது.

அடி 48-49
வித்தக வேடம் - ஞானாசிரியக் கோலம். தூண்டு சோதி (இறைவன்) தோற்றியபின்னர், அடிகள் தம் விருப்பின் வழியே மீளத் திருப்பெருந்துறை செல்லுங்கால், வழியில் உத்தரகோசமங்கையில், `இறைவன் இதுகாறும் திருப்பெருந்துறையுள் முன்போல இருந்து நம்மை ஏற்றருள்வானோ! ஏலாது விட்டுவிடுவானோ` என்னும் ஏக்கத்தால், நீத்தல் விண்ணப்பம் பாடி நின்றபொழுது, இறைவன் அடிகளை ஆட்கொண்ட அவ்வடிவிலே தோன்றி, `திருப்பெருந்துறைக்கு வருக` என அருளினான் என்பது கொள்ளற்பாலதாம். என்னை? ``திருவார் பெருந்துறை`` என வருகின்ற அதற்கு முன்னரே இதனை அருளினமையின். இதனைப் பின்னர் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறும்.
அடி 50-51
தூ வண்ண மேனி, பொன்னால் அமைக்கப்பட்ட திருமேனி. ``தொன்மை`` என்றதனால், இதன் வரலாறு, பரஞ்சோதியார் திருவிளையாடலுட் சொல்லப்பட்டவாறே கொள்ளத் தக்கது. இத்திருமேனியை அடிகள் திருப்பூவணத்தில் கண்டு வணங்கி மகிழ்ந்தார் என்க.
அடி 52-53
திருப்பெருந்துறைக்குச் செல்லும் முன்பு அடிகள் தமது திருவவதாரத் தலமாகிய திருவாதவூரில் சென்று சின்னாள் தங்கியிருந்தாராக, இறைவன் அவரைத் தனது பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அங்குநின்றும் போதரச் செய்தான் என்பது ஈண்டுப் பெறப்படுவதாகும். இங்ஙனம் போதரச் செய்த கருணைப் பெருக்கையே அடிகள், `பண்பு` எனப் போற்றியருளிச் செய்தார். இதனை, இறைவன் குதிரை கொணர்ந்த காலத்து நிகழ்ந்ததாக, நம்பி திருவிளையாடல் கூறும். ``காட்டிய`` என்றது. `தோற்றுவித்த` என்றவாறு.
அடி 54-55
திருவார் பெருந்துறை - கடவுட்டன்மை நிறைந்த பெருந்துறையின்கண். செல்வன் - ஞான வள்ளல். ஆகி - ஆகி வீற்றிருந்து. ``கருவார் சோதி`` என்றது. `இறைவன் வெளிப்படுதற்கும் மறைவதற்கும் இடமாய் நிற்கும் ஒளிப்பிழம்பு` என, அதன் தன்மை கூறியவாறு. சிலரை யொழித்துச் சிலரொடு மாத்திரம் மறைந்து, மீண்டும் வெளிப்படாதொழிந்தமை பற்றி, ``கள்ளம்`` என்றார். திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாய் வீற்றிருந்த இறைவன், `நீ தில்லைக்கு வருக` எனக் கட்டளையிட்டு, அவ்விடத்தே ஒளியைத் தோற்றுவித்து, அப்பொழுது அங்கிருந்த ஏனை அடியவர்களை அதனுட் புகச்செய்து, தானும் அதனுள் மறைந்தருளினான் என்க. பக்குவம் இன்மை நோக்கி இறைவன் சிலரை அப்பொழுது அங்கு இல்லாது நீங்கச் செய்தான் போலும்! இவ் வரலாற்றினைப் புராணங்கள் சிறிது வேறுபடக் கூறும்.
அடி 56-57
``பூவலம்`` என்றது, `பூப் பிரதட்சிணம்` என்னும் பொருட்டாய், அடிகளது சிவதல யாத்திரையைக் குறித்தது. `இல்` என்பது, `உண்ணுதற்கண் வந்தான்` என்பது போல, வினை செய்யிடத்தின்கண் வந்த ஏழனுருபு. இஃது உணராமையால், இதனை ஒரு தலத்தின் பெயராக மயங்குப. இறைவன் தம்மை உடன்கொண்டு செல்லாது, `தில்லைக்கு வருக` என்று சொல்லி மறைந்தது, தம் பாவத்தால் (வினையால்) எனவும், அவை அவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றிலும் சென்று வணங்கினமையால் கெட்டொழிந்தன எனவும் அடிகள் கருதினார் என்பது இவ்வடிகளால் விளங்கும். ``பொலிந்தினிதருளி`` என்றது, தலங்கள்தோறும் எழுந்தருளியிருந்து திருவருள் செய்தமையை.
இத்துணையும், இறைவன் தமக்கு அருள்புரிந்தமையைக் கூறியவாறு. பின்னர்ப் பிற தலங்களுட் செய்தவற்றைக் கூறுவாராகலின், மதுரையில் நிகழ்ந்தவற்றை முடித்தற்கு, குதிரைச் சேவகனாகியதனையும், மண் சுமந்ததனையும் இடையே பெய்துரைத்தார். இஃது உணராது, குதிரைச் சேவகன் ஆகியதை முன்னர் அடிகட்குச் செய்த அருளாகவே கொண்டு உரைப்பாரும் உளர். அடியவட்காக மண் சுமந்த வரலாற்றை அடிகள் வரலாற்றோடு வலிதிற் பிணைத்தமையும், இவ்வாற்றால் விளைந்ததேயாம். இனி, ஏனையோர் பலர்க்கு ஆங்காங்கும் அருள்புரிந்தமை கூறுவார்.
58-59. தண்ணீர்ப் பந்தர் வைத்தமை இன்ன இடத்து என்னாமையால், பின்னர் வரும், `திருவெண்காடு` என்றே கொள்ளப்படும். அதனானே, சயம் (வெற்றி) பெறச் செய்தது, சோழனையாம். இதனைப் பாண்டியன் பொருட்டு மதுரையிற் செய்ததாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். நன்னீர் - நல்ல நீர்மை. `சேவகன்` என்றது, தண்ணீரைத் தானே கொடுத்தமை பற்றி.
அடி 60-61
திருவெண்காட்டில் இறைவன் விருந்தினனாய் வந்து குருந்தமரத்தடியில் அமர்ந்திருந்த வரலாறு அறியப்படவில்லை.
அடி 62-63
இவ்வடிகளிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருவிளையாடற் புராணங்களிற் காண்க.
அடி 64-67
இவற்றுட் குறிக்கப்பட்ட இருவரலாறுகளையும் மதுரையில் நிகழ்ந்தனவாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். எனினும், பட்டமங்கையில் நிகழ்ந்தனவாதல் வேண்டும்.
அடி 68-69
பார்ப் பாலகன் - மண்ணுலகக் குழந்தை. இருமை - பெருமை; அஃது, அருமைமேல் நின்றது, ``உகந்தினிதருளி`` என்றதனால், முன்னர் விருத்தனாய் வந்து, பின்பு கட்டிளைஞனாய் நின்றமையும் கொள்ளப்படும். படவே, விருத்தகுமார பாலரான திருவிளையாடலே இது என்றல் பொருந்துவதாம்.
அடி 70
ஈண்ட - மக்கள் பலரும் திரண்டு வந்து காண. இங்ஙனம் இறைவன் இங்கு வீற்றிருந்த வரலாறு அறியப்படவில்லை. எல்லாம் வல்ல சித்தரானது போல்வதொன்றாதல் வேண்டும்.
அடி 71-72
தென்பால் தீவு, இலங்கையேயாம். ஆகவே, ``தேவூர்`` என்றதனை அதற்கேற்பக் கொள்க. இராமேசுவரத்திற்கு, `தேவை` என்னும் பெயர் தாயுமானவர் பாடலில் `மலைவளர் காதலி` என்னும் பகுதியிற் காணப்படுகின்றது. கோவார் கோலம் - அரசத் தன்மை நிறைந்த வடிவம். ``கொண்ட`` என்றதனால், ஈழநாட்டில் அன்புடைய அரசன் ஒருவனுக்கு இறைவன் அரச வடிவத்தில் வந்து அரசியல் முறையை விளக்கி மறைந்தனன் என்று கொள்ளலாகும். இதுவே, திருவிளையாடற் புராணங்களில், சிவபெருமான் சௌந்தர பாண்டியனாய் இருந்து அரசளித்த வரலாறாக அமைந்தது.
அடி 73-74
ஞானம் நல்கியது அடியவர் பலர்க்காம். அதனானே, ஆரூர் அடியவர் திருக்கூட்டத்திற்கு இடமாயிற்று என்க.
அடி 75-76
ஈண்ட - அடியவர் புடைசூழ. படிமப் பாதம் - தவ நெறி. வைத்த - நிலைநிறுத்திய. என்றது, `தானே வழிபாடு செய்வோனாய் இருந்து வழிபட்டுக் காட்டிய தன்மை` என்றவாறு. திருவிடைமருதூர் இறைவன் தன்னைத் தானே பூசித்த தலமாதல் அறிக.
அடி 77-78
இயல்பாய் இருத்தல் - சுயம்பு லிங்கமாய் எழுந் தருளியிருத்தல். கச்சி ஏகம்பத்தில் அம்மையது தவத்திற்கு இரங்கி இறைவன் மாவடியில் சுயம்பு லிங்கமாய்த் தோன்றினமையைப் பெரிய புராணத்துட் சேக்கிழார் கூறினமை காண்க. பின்பு அம்மை செய்த வழிபாட்டின் பயனாக அவளை இறைவன் தனது இடப் பாகத்தில் இருத்திக் கொண்டனன் என்க.
அடி 79-80
மருவார் குழலி, உமையம்மை. அவளோடு மகிழ்ந்தது. அவளது வழிபாட்டினாலாம். அம்மை பூசித்த தலங்களாகச் சில தமிழ் நாட்டில் விளங்குதல் காண்க. இங்ஙனம் யாதானும் ஒரு சிறப்பு அம்மைக்கு உளதாய தலங்களில் மட்டுமே முதற்காலத்தில் அம்மைக்குத் தனிக்கோயில் இருந்ததென்பது, காஞ்சியில் காமக் கோட்டம் வேறோரிடத்தில் தனித்திருத்தலும், அங்குள்ள பல சிவாலயங்களுள் ஒன்றிலும் அம்மைக்குத் தனிக் கோயில் இல்லாமையும் பற்றி அறிந்து கொள்ளப்படும்.
அடி 81-82
சேவகன் - வீரன். சிலை - வில். இறைவன் வில் வீரனாய்த் தோன்றிச் செய்த வீரச் செயல்கள் பலவும் அவனுக்கு நாடகமாத்திரையாய் அமைதலின், அவற்றை, ``பாவகம்`` என்றார். இங்ஙனம் காட்டிய திருவிளையாடல், திருவிளையாடற் புராணங்களிற் காணப்படும். ஆயினும், அதனைத் திருவாஞ்சியத்தில் நிகழ்ந்தது எனக் கொள்க. இத்துணையும் ஆங்காங்கு அடியவர் பலர்க்கு அருளினமை கூறியவாறு. இனி, தலங்கள் பலவற்றில் இறைவன் எழுந்தருளியிருக்கும் திறத்தினையே கூறுவர்.
தானெழுந்தருளியும் என்பது முதலாக இதுகாறும் உம்மை கொடுத்து எண்ணிவந்தவைகள் அனைத்தையும், `ஆகிய இவை யெல்லாம் எந்தமை யாண்ட பரிசுகளாம்` எனப் பின்வரும் நூற்றிரண்டாம் அடியுடன் தொகுத்து முடிக்க.
அடி 89-91
இடம்பெற - நீங்காது விளங்க. ஈங்கோய் மலையில் உள்ள பெருமான் மரகத வடிவில் அழகுடன் விளங்குதல் காண்க. `சைவன்` என்பதும், `சிவன்` என்னும் பொருளதேயாம். இதற்கு வரலாறு ஒன்றனைக் கூறுவர் பலரும். `அருத்தி`- விருப்பம். வழுக்காது - நீங்காது. அறம்பல அருளியும் என்றது, ஆல் நிழற் கடவுளாய் வீற்றிருத்தலை. குறியாய் - குறியாக; அத்தலத்தில் இருத்தலே குறிக்கோளாக.
அடி 92-96
இவ்வடிகளில், இறைவன் தேவர்கள் முன்னே செய்த ஒரு திருவிளையாடல் குறிக்கப்படுகின்றது. அது வருமாறு:- தேவர் பலரும் கூடி ஒருகால் அசுரரை வென்று பெருமிதம் கொண்ட காலை, மால், அயன், இந்திரன், அக்கினி, வாயு முதலிய பலரும், `வெற்றி என்னால் விளைந்ததே` எனத் தனித்தனியே ஒவ்வொருவரும் கூறித் தம்முட் கலாய்த்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் அளவற்ற பேரழகுடன் ஓர் யட்சனாய்த் தோன்றி ஓரிடத்தில் துரும்பு ஒன்றை நட்டு, அதன் அருகில் இறுமாந்து அமர்ந்திருந்தார். அவ்யட்சனை இன்னான் என்று அறியாத தேவர்கள், `நீ யார்? உனக்கு இத்துணை இறுமாப்பிற்குக் காரணம் என்னை?` என்று வினவினர். சிவபெருமான் `நான் யாராயினும் ஆகுக; உங்களில் யாரேனும் இத்துரும்பை அசைத்தல் கூடுமோ?` என்று வினவினார். தேவர்கள் அவரது வினாவைக் கேட்டு நகைத்து அத்துரும்பை அசைக்க முயன்றனர். அஃது இயலவில்லை. இந்திரன் வச்சிராயுதத்தால் வெட்டியபொழுது, வச்சிராயுதமே கூர்மழுங்கிற்று. அக்கினிதேவன் அத் துரும்பை எரிக்க முயன்றான்; வாயுதேவன் அசைக்க முயன்றான்; பிறரும் வேறு வேறு முயன்றனர். ஒருவராலும் அத் துரும்பை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால், தேவர் பலரும் நாணமுற்றிருக்கையில் பெருமான் மறைந்தருளினான். `வந்தவன் யாவன்!` என்று, தேவர்கள் திகைத்தனர். அப்பொழுது அவர்கள்முன் அம்பிகை வெளிப்பட்டு நின்று, `வந்தவர் சிவபெருமானே` என்பதை அறிவித்து, `ஒரு துரும்பை அசைக்க மாட்டாத நீங்களோ அசுரரை வென்றீர்கள்; உங்களுக்கு வெற்றியைத் தந்தவன் சிவபெருமானே` எனக் கூறி மறைந்தாள். அதனால் தேவர்கள், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்று உணர்ந்து தம் செருக்கு நீங்கினர். இது, கேனோப நிடதத்துச் சொல்லப்பட்டது. இதனைக் காஞ்சிப் புராணம் விரித்துக் கூறும். இவ் வரலாற்றையே இங்கு அடிகள் அருளியிருத்தலை, ஊன்றி நோக்கி உணர்க. ``சுந்தர வேடம்`` என்றது, அழகிய யட்ச வடிவத்தை. முதல் உருவு - தலைவன் வடிவம். இந்திர ஞாலம் போல வந்தது, தேவர் வியப்பப் பொருக்கெனத் தோன்றினமையாம். எவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்தமை - எல்லாத் தேவர்களது ஆற்றலும் தன்முன் மடங்கச் செய்தமை. தானேயாகியது - அனைத்திற்கும் முதல்வன் தானேயாதலை விளக்கினமை. இவ் வரலாற்றை இங்கு எடுத்தோதியது, அடுத்து வரும் திருவிளையாடல் இதனோடு ஒத்திருத்தல் பற்றியாம். ஆகவே, இஃது உடம்பொடு புணர்த்தலாயிற்று.
அடி 97-99
சந்திர தீபம், ஒரு தலம். அன்றி, `ஒரு தீவு` என்றலுமாம். சாத்திரன் - ஞானநூற் பொருளை யுணர்த்துவோன். `அந்தரத்தினின்றும் இழிந்து வந்து` என்க. பாலை, ஒரு மரம். அது தழையிலது ஆயினும், இறைவன் அமர்ந்திருந்தமையின் அழகுடையதாயிற்று. ``பாலையுள்`` என்றதில் `உள்` என்பது, `கீழ்` என்னும் பொருளது. சுந்தரத் தன்மை - அழகிய வடிவம். துதைந்து - நீங்காது பொருந்தி. இன்னதொரு வரலாறு இங்குக் குறிக்கப்பட்டது என்க.
அடி 100-102
ஆகமங்களையே, `மந்திரம்` என்றார். மகேந்திர மலை பற்றி மேலே (அடி.9-10) கூறப்பட்டது. ``எந்தமை`` என்றது, தம்மையும், பிற அடியார்களையுமாம். பரிசு - தன்மை; திருவருட் செயல்கள்.
`மகேந்திர வெற்பனாகிய அவ் வருளுடையண்ணல் (அடி 100-101) இருந்தும் (அடி 83), காட்டியும் (அடி 84)......... துதைந்திருந்தருளியும் (அடி 99) `எந்தமை ஆண்ட பரிசது பகரின்` என்க. இவைகளால் இறைவனது திருவருட் செயல்களைச் சிறப்பு வகையிற் பல்லாற்றானும் அருளிச் செய்தவாறு. இனி, `பரிசது பகரின்` எனத் தொடங்கித் தசாங்கம் கூறுகின்றார்.
தசாங்கம் - பத்து உறுப்பு. அரசர்க்குரிய சிறப்புப் பொருள்களே, இங்கு, `உறுப்பு` எனப்படுகின்றன. அவை இங்கு, `கொடி, யாறு, முரசு, படைக்கலம், மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை` என்னும் முறையிற் கூறப்படுகின்றன. இவை, ``படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்`` (குறள் 381) என்ற முறையானன்றி, வேறொரு வகையாற் கூறுப்படுவன. இவைபற்றி அரசர்கள்மீது அகலக் கவிகளை இயற்றும் வழக்கம் பிற்காலத்தில் சிறந்து விளங்கியது. அதனால், அடிகள் இறைவனை அவ்வாற்றாற் பாடுகின்றார்.
அடி 103-104
`திருவுருவில் உள்ள` என்க. நீறு - திருநீறு. கொடி, `கோடி` என நீண்டது. `கொடீஇ` என்பதொரு பாடமும் உண்டு. பின்னர் வரும் `தசாங்கம்` என்னும் பகுதியுள் கூறப்படுவனவற்றோடு இங்குக் கூறப்படுவன சிறிது வேறுபடும். அங்ஙனம் படும் இடங்களில், இரண்டும் கொள்ளற்பாலனவாம். அவ்வாற்றால் இங்குத் திருநீற்றுக் கொடி கூறப்பட்டது; அங்கு ஏற்றுக் கொடி கூறுப. திருவுருவில் உள்ள திருநீற்றின் முக்குறித் தொகுதிபோல எழுதப்பட்ட வடிவத்தை, ``திருவுரு நீறு`` என்று அருளினார். ``நிமிர்ந்து`` என்றதனை, `நிமிர` எனத் திரிக்க. நிமிர்தல் - உயர்தல்.
இவற்றால், `இறைவனுக்கு, திருநீறே கொடி` என்பது, கூறப் பட்டது. இக்கொடி ஞானாசிரியனாய் இருக்கும் நிலையிலாம்.
அடி 103-106
ஊனம் - குறைகள்; துன்பங்கள். ஒருங்கு - ஒரு சேர. உடன் - விரைவாக. `துன்பங்கள் அனைத்தையும் வாராது ஒரு சேர நீக்கும் ஆனந்தம்` என்றதனால், அது பேரின்பமாயிற்று.
இவற்றால், `இறைவனுக்குப் பேரின்பமே யாறு` என்பது கூறப்பட்டது. எதுகை நயத்தை நோக்கும்வழி, `ஊனந்தம்மை` என்பதே பாடம்போலும் எனலாம்.
அடி 107-108
மாதிற் கூறுடை - உமையிடத்தில் ஒரு கூற்றை உடைய. நாதம் - சூக்குமை வாக்கு. இதுவே, வேதம் முதலிய நூல்கட் கெல்லாம் பிறப்பிடமாகலின், இறைவனுக்குச் சிறந்த பறையாயிற்று. ``பறை`` என்றது, முரசினை. நவின்று - தொடர்ந்து. கறங்கவும் என்ப தற்கு, `ஒலிக்கச் செய்தும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குச் சூக்குமை வாக்கே முரசு` என்பது கூறப்பட்டது.
அடி 109-110
அழுக்கு - குற்றம்; வினை; என்றது ஆகாமியத்தை. கழுக்கடை - முத்தலை வேல்; சூலம்.
இவற்றால், `இறைவனுக்குச் சூலமே படைக்கலம்` என்பது கூறப்பட்டது.
அடி 111-114
மூலம், பிறவிக்கு என்க. `அறுக்கும் சோதி, தூய மேனிச்சோதி` எனத் தனித்தனி இயையும். சோதி, இறைவன். காதலன்-பேரன்பன்; அருளாளன்; என்றது ஞானாசிரியனை. கழுநீர்- செங்கழுநீர்ப் பூ. ஏல் - ஏற்பு; முதனிலைத் தொழிற்பெயர்.
இவற்றால், `இறைவனுக்குச் செங்கழுநீர் மாலையே மாலை` என்பது கூறப்பட்டது. இதுவும், ஞானாசிரியக் கோலத்தில் என்க.
அடி 115-116
பரிமா - குதிரை. ``வண்ணமும்`` என்றாரேனும், `வண்ணனாகியும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குக் குதிரையே ஊர்தி` என்பது கூறப்பட்டது. இஃது அடிகள் தாம் கண்ட காட்சி பற்றிக் கூறியதாம்.
அடி 117-118
மீண்டு வாரா வழி - மறித்துப் பிறப்பில் வாராத நெறி; வீட்டு நெறி, ``மற்றீண்டு வாரா நெறி`` என்னுந் திருக்குறளை (356) நோக்குக. ``பதி`` என்றது நாட்டினை. இது முதலாக நான்கிடத்தும், `ஆகவும்` என்பதற்கு, `ஆகக் கொண்டும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குப் பாண்டிநாடே நாடு` என்பது கூறப்பட்டது. இதுவும், இறைவன் தம் பொருட்டுக் குதிரை வாணிகனாய் வந்தது முதலிய பெருங்கருணைத் திறம் பற்றிக் கூறியதாம்.
அடி 119-120
பரம்பரம் - மேலுள்ளதற்கு மேலுள்ளது; பரமுத்தி நிலை. ``அப்பாலைக் கப்பாலைப் பாடுதும்`` என்பர் தி.8 திருவம்மானையிலும் (11). உய்ப்பவன் - செலுத்துபவன்.
இவற்றால், `இறைவனுக்கு உத்தரகோச மங்கையே ஊர்` என்பது கூறப்பட்டது. இதன்கண் அடிகளுக்கு இறைவன் மீள ஞானாசிரியனாய் வெளிப்பட்டு அபயம் அளித்தமை மேலே (அடி. 48-49). காட்டப்பட்டது.
அடி 121-122
ஆதி மூர்த்திகள் - மும்மூர்த்திகள். இவர்களுக்குப் பரமசிவன் வெளிப்பட்டுத் தோன்றி, படைத்தல் முதலிய முத்தொழிலையும் இயற்றும் நிலையை வழங்கியதனையே, ``அருள் புரிந்தருளிய`` என்றார். ``ஆதி மூர்த்திகட்கு அருள் புரிந்தருளிய`` என்றது, `தேவ தேவன்` என்னும் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு. `தேவ தேவன்` என்பது, `தேவர்கட்குத் தேவன்` எனப் பொருள்படும். `மகாதேவன்` என்பதும் இப்பொருளது. `தேவ தேவன்` அதுவே திருப்பெயராகக் கொண்டும்` என்க.
அடி 123-124
இங்கு, `ஊர்தி` என்றது, மீதூர்ந்து ஓடுவதாகிய யாற்றைக் குறித்தது. ``ஊனந்தன்னை ஒருங்குடன் அறுக்கும் ஆனந்தம்`` என மேற்கூறியதனையே, இங்கு, ``இருள்கடிந்தருளிய இன்பம்`` என்றார். எனவே, `அப்பேரின்பமாகிய யாற்றை உண்டாக்கிய பெருமையையுடைய அருளையே மலையாகக் கொண்டும்` என்பது பொருளாயிற்று.
இவற்றால், `இறைவனுக்கு அவனது திருவருளே மலை` என்பது கூறப்பட்டது. இங்ஙனம் கொடி முதலாக, மலை ஈறாகப் பத்து உறுப்புக்களும் கூறப்பட்டமை காண்க.
அடி 125-126
``அப்பரிசதனால்`` என்றதை, ``எப்பெருந் தன்மையும்`` என்றதற்கு முன்னர் வைத்து, இங்ஙனம், `இத்தசாங்கங்களைக் கொண்டு விளங்கும் தன்மையாலே` என உரைக்க. தன்மை, இயற்கையும் செயற்கையுமாகிய நிலைகள். திறம், ஆற்றல். `உலக வேந்தர்கள் பத்து உறுப்புக்களோடும் கூடி நிற்றலால், எத்தகையோரையும் தம் ஆணைவழிப்படுத்து ஆளுதல் போல, ஞான வேந்தனாகிய இறைவன் எத்தகையோரையும் தன் அருள் வழிப்படுத்து ஆட் கொள்கின்றான்` என்றபடி. அதற்கு, அமைச்சராய் இருந்து ஆளான அடிகளே சான்றாவர். அத்தகையோரான மற்றும் பல அடியார்களை அடிகள் திருப்பெருந்துறையில் கண்டனர் என்பது, பின்வரும் அடிகளால் விளங்கும்.
அடி 127-131
``என்னை`` என்றதனை முதலில் வைத்து, `என் ஐ` எனப் பிரித்துப் பொருள் உரைக்க. `ஏற்ப` என்பது, பகரவுகரம் தொக, `ஏல` என நின்றது. `என் வினைக்கேற்ப` என்றவாறு. இதனை, ``நாயினேனை`` என்றதன் பின்னர்க் கூட்டுக. கோலம்-அழகு. பொது-சபை; அம்பலம். ஈங்கு-இவ்வுலகத்தில். உடன் சென்றது, சோதியிற் கலந்து என்க. அருள் பெறும் - திருவருளை முற்றப் பெறும் தகுதியுடைய. ஒன்ற - தன்னோடு ஒன்றுபட. `அஃதாவது, பிறிதொன் றனையும் அறியாது தன்னையே அறிந்து நிற்க` என்றபடி, இதுவே, `ஞாதுரு ஞான ஞேயங்கள் அற்ற நிலை, பேச்சற்ற நிலை` என்றெல்லாம் சொல்லப்படுவது. எனவே, பரமுத்தி நிலை என்பது பெறப்பட்டது. ``ஒன்ற ஒன்ற`` என்ற அடுக்கு, பன்மைபற்றி வந்தது. ``உடன் கலந்தருளி`` என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. ``உடன் கலந்தருளி`` என்றதற்கு, `அவர்களோடு தானும் நீக்கமின்றிக் கலந்தும்` என்க. இது, தானும் சோதியிற் கரந்ததைக் குறித்தவாறு. இஃது, அவர்கட்குப் `போகமாய்த் தான் விளையும் பொற்பி`னைக் (சிவஞான போதம் - சூ. 11 அதி. 1) குறித்ததாம். ``கலந்தருளியும்`` என்றது `கலந்தருளிய பின்னும்` என்னும் பொருட்டு; உம்மை, எதிரது தழுவிய எச்சம்; என்னை? பின்வரும், `பாயவும்` என்பது முதலியவற்றைத் தழுவி நிற்றலின்.
அடி 132-139
எய்த - சோதியிற் கலத்தல் தமக்குக் கிடைக்கும்படி. வந்திலாதார் - ஆண்டு விரைந்து வாராதவர். மால் - பித்து. மயக்கம் - மூர்ச்சை. ``புரண்டு வீழ்ந்து`` என்றதனை, `வீழ்ந்து புரண்டு` என மாற்றிக் கொள்க. ``மண்டி, அரற்றி`` என்றவற்றின் பின்னரும், எண்ணும்மை விரிக்க. இறைவன் தோற்றுவித்த சோதியிற் கலக்கும் பேறில்லாதவர்கள், தீப்பாய்தல் முதலிய பலவாற்றால் அவன் திரு வடியை அடைந்தனர்; அது மாட்டாதார், உலக இன்பத்திலும் வெறுப்புடையராய் ஏக்கமுற்றனர் என்க.
பரம நாடகம் - மேலான கூத்து. இதம் - இன்பம்; இஃது உலகின்பத்தைக் குறித்தது. சலிப்பு - வெறுப்பு.
அடி 140-146
`ஒலிதரு கயிலை உயர்கிழவோன்`` என்றதை முதலிற் கூட்டுக. இமயத்து இயல்பு, பொன்மயமாய் நிற்றல். `அம் பொற் பொது` எனவும், `நடம் நவில் இறைவன்` எனவும் இயையும். புலியூர் - பெரும்பற்றப் புலியூர்; தில்லை. ``கனி தரு`` என்றதில் உள்ள தரு, உவம உருபு. உமைக்கு அருளிய நகை மகிழ்வு நகை எனவும், காளிக்கு அருளிய நகை வெகுளி நகை எனவும் கொள்க. இவற்றால் முறையே, அளியும், தெறலும் அருளப்பட்டன. காளிக்கு நகை அருளியது நடனப் போரிலாம். ஈண்டிய அடியவர், திருப்பெருந் துறையிற் பல்லாற்றானும் தன்னையடைந்து திரண்ட அடியவர். ``புக்கினி தருளினன்`` என்றதை, `இனிது புக்கருளினன்` என மாற்றி யுரைக்க. ஒலி, அரவொலி, ஆகம ஒலி, அறிவார் அறி தோத்திர ஒலி முதலியன. (தி. 7 ப.100 பா. 8) `கயிலையின்கண் உள்ள உயர்ந்த கிழவோன்` என்க. கிழவோன் - எல்லாப் பொருளையும் தனக்கு உரிமையாக உடையவன். `கயிலையில் உள்ளவனாயினும் புலியூரில் நடம் நவில் இறைவன் ஆதலின், புலியூர் புக்கருளினன்` என்றபடி. இங்ஙனமே திருநாவுக்கரசரும், புக்க திருத்தாண்டகத்தில், சிவ பெருமான் பல்வேறு தலங்களிற் காணப்படினும், புலியூர்சிற்றம்பலமே புக்கதாக அருளிச் செய்தல் காண்க. அன்றித் தம்மை, `கோலமார்தரு பொதுவினில் வருக` என்று அருளிப் போயினமை பற்றிக் கூறினார் என்றலுமாம்.
இனி இத்திருவகவலில், `தில்லை மூதூரில் ஆடிய திருவடியை யுடையான், பல்லுயிர்களிலும் பயின்றோனாகித் தனது எண்ணில்லாத பல குணங்களும் எழுச்சிபெறுமாறு விளங்கிநின்று, தோற்றல், அழித்தல் முதலியவற்றால் உயிர்களது அகவிருளை முற்றும் நீக்கி, அவைகளது உள்ளத்தில் அன்பு மீதூரும்படி அவ்வுள்ளங்களையே குடியாக் கொண்ட செயல்களும், அவற்றின் மேன்மைகளும் யாவை யெனின், ஆகமம் தோற்றுவித் தருளியும்............ ஆரியனாய் அமர்ந்தருளியும் இவ்வாறு மங்கையும் தானுமாய் வந்தருளி, அதன் பின், சாத்தாய்த் தானெழுந்தருளியது முதலாகப் பாவகம் பலபல காட்டிய பரிசு ஈறாக உள்ளனவாம். இனி அவற்றின்மேலும், கடம்பூர் முதலாகச் சந்திரதீபம் ஈறாகக் கூறிய தலங்களில் கோயில் கொண்டிருந்து, மகேந்திர வெற்பனாகிய அவ்வண்ணல் எங்களை ஆட்கொண்ட தன்மையை விளங்கக் கூறுமிடத்து, திருநீறாகிய கொடி முதலாகவும், திருவருளாகிய மலையீறாகவும் உள்ள பத்து உறுப்புக்களையும் கொண்டு நின்று, எத்தகையோரையும் தனது திருவருளின் வழிப்படுத்து ஆண்டுகொண்டு, அவர்களில் நாயினேனை, என் வினையிருந்தவாற்றிற்கு ஏற்ப, `தில்லையில் வருக` எனப் பணித்து விட்டுத் தகுதி மிக்க அடியார்களோடு தான் திருவுருக்கரந்தருளிய பின்னும், அப் பேறில்லாதவருட் சிலர் எரியிற் பாய்தல் முதலியவற்றால் தனது திருவடியை அடையவும், அவை மாட்டாதார் ஏக்கமுற்று நிற்கவும், கயிலை உயர்கிழவோனாகிய புலியூர்ப் பொதுவினில் நடம் நவிலும் அவ்விறைவன், அவ்விடத்து மீள வெளிப்படாதே, தன்னை அடைந்த அடியார்களோடும் புலியூரில் இனிது புகுந்தருளினான்` என்னும் வகையில் சொற்களை இயைத்துப் பொருள்கொள்க.
இங்ஙனம் இத்திருப்பாட்டில் இறைவனது திருவருள் விளையாட்டுக்களைப் பொது வகையானும், சிறப்பு வகையானும் அடிகள் அருளிச் செய்தமை காண்க.

No comments:

Post a Comment