Saturday, June 11, 2011

ஈழத்துத் தமிழ்ச் சொற்பொழிவின் செல்நெறி





தமிழில் சொற்பொழிவு என்ற வடிவம் நீண்ட வரலாற்றை உடையதா? அன்றி மேனாட்டார் வருகையால் எம்மிடையே புகுந்து கொண்ட ஓரு வடிவமா என்பது குறித்து வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. ஆயினும் இதன் தொடக்க காலமாகச் சங்ககாலத்தைக் கொள்வதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. சிலப்பதிகாரத்தில் நாடுகாண்காதையில் சமணசமயக் கடவுளான அருகக் கடவுளின் பெருமைகள் குறித்து தருமசாரணர் உரையாற்றுகின்றார். மணிமேகலையில் ‘சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில்’ சமய உண்மைகளை வெளிப்படுத்துவதற்காக ‘உரைச்செயற்பாடு’ இடம்பெறுகின்றது. இவ்வாறு பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் சொற்பொழிவுச் செயற்பாட்டுடன் தொடர்புடைய வடிவங்கள் கையாளப்பட்டிருக்கின்ற நிலையில் ஈழத்திலும் தமிழ்ச் சொற்பொழிவினுடைய தொடக்கம் நீண்ட பாரம்பரியத்திற்குட்பட்டதாக இருந்திருக்க முடியும் என்றே கருதமுடிகின்றது.

சொற்பொழிவு, சொற்பெருக்கு, பிரசங்கம், உபந்நியாசம், உரை, பேச்சு, போன்ற பதங்கள் ஆற்றுகை நிலையில் சிறிய சிறிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் இக்கட்டுரையில் இவை யாவற்றையும் குறிப்பதற்கான கலைச் சொல்லாகச் ‘சொற்பொழிவு’ என்ற பதம் கையாளப்படுகின்றது. 

ஈழத்தில் சொற்பொழிவின் தோற்றமும் வளர்ச்சியும்

சொற்பொழிவானது வாய்மொழி மூலமான ஆற்றுகைக் கலையாக இருப்பதாலும் ஈழத் தமிழர்களிடையே ஆவணப்படுத்தும் பண்பு அரிதாக இருப்பதாலும் ஈழத்தில் சொற்பொழிவுச் செயற்பாடு குறித்த சான்றுகளைப் பண்டைய இலக்கியங்கள் வாயிலாகப் பெறமுடியவில்லை. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு குறித்த ஓரளவு தெளிவான தகவல்கள் யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துடனேயே (கி.பி. 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே) ஆரம்பமாகின்ற நிலையையும் இங்கு சுட்டிக்காட்டல் பொருந்தும். இதனால் ஐரோப்பியர் வருகைக்கு முன் ஈழத்தில் சொற்பொழிவுப் பாரம்பரியம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தில. 

ஈழத்துத் தமிழ்ச் சொற்பொழிவின் புத்தெழுச்சி ஐரோப்பியர் வருகையுடனேயே ஏற்பட்டது. அமெரிக்க மிசனறிமாரால் 1823 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்ட செமினறியின் (Batticotta Seminary) பாடத்திட்டத்தில் மூன்றாம் வருடக் கல்விப் பாடமாகப் ‘பேச்சு’ என்ற கலை போதிக்கப்பட்டது. 

ஈழத்தில் புராணபடன மரபுக்கு முக்கியத்துவம் வழங்கும் நிலை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதனைப் புராணப் பிரசங்கம் எனக் குறிப்பிட்டனர். புகழ் பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் ஒல்லாந்தர் காலத்தில் இருபாலைச் சேனாதிராய முதலியார் புராணப் பிரசங்க மரபைத் தொடக்கி வைத்தார். புராணப் பிரசங்கம் என்பது ஒரு பாடலை விரித்துப் பொருள் உரைத்தல் ஆகும். இது ஒரு வகையில் சொற்பொழிவுச் செயற்பாட்டிற்கான அடிப்படை எனக் கருத முடிகின்றது. 

“ இந்துக் கோவில்களில் புராணம் படிக்கப்பட்டு விளக்கவுரைகள் வழங்கப்பட்ட பொழுதிலும் இந்துக்கள் குறிப்பிட்ட ஒரு பொருளில் தர்க்க ரீதியாக விடயங்களை நிரைப்படுத்திச் சொற்பொழிவு செய்யும் ஆற்றலை வளர்க்கவில்லை” என எஸ். ஜெபநேசன் குறிப்பிடுகின்றார். இதற்கான காரணங்களைத் தேடும் போது தமிழகத்தில் சொற்பொழிவுச் செயற்பாடு மந்தநிலை அடைந்திருந்தமைக்கு ரா.பி. சேதுப்பிள்ளை கற்பித்த காரணங்களை இங்கும் பொருத்திப் பார்க்க முடிகின்றது. 

“பாரத நாட்டில் வேற்றரசு வீற்றிருந்த நாளில் மேடைப் பேச்சு தங்கு தடையின்றி நடந்ததில்லை. ‘இம்மென்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்!’ என்று பாரதி பாடிய வன்கண்மையைக் கண்கூடாகக் கண்டது இந்நாடு. தமிழில் சொற்பொழிவானது சமயத் தளத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அரசியல் சமூகவியல் எனப் பயணித்து இன்று தொழில்சார் சொற்பொழிவாளர்களையும் உருவாக்கியிருக்கின்றது. 

சொற்பொழிவு என்ற சொற்கையாட்சி 20 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் பிரசங்கம் என்ற வடசொல்லே பெரும் பயன்பாட்டில் இருந்தது. ரா.பி. சேதுப்பிள்ளையின் கூற்று இதனை ஆதாரப்படுத்தும். “இக்காலத்தில் சொற்பொழிவு என்ற சொல்லைத் தமிழறிஞர்கள் வழங்குகின்றார்கள். வானத்து நின்று பொழியும் மழை போல மேடையினின்று பொழியும் சொல்மாரியைச் சொற்பொழிவு என்ற சொல் உணர்த்துவதாகும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னே சொற்பொழிவு ஆற்றுப்படை என்ற நூலை இயற்றினார் ஒரு தமிழறிஞர். சொற்பொழிவு செய்யும் முறைகளை எடுத்துரைத்துப் பேச்சாளருக்கு நெறி காட்டுவது அவ்வுரைநடை நூல். ஆயினும் சொற்பொழிவு என்னும் சொல் புதுச்சொல்லாய் இருந்தமையால் அந்நூலை ஏளனம் செய்யத் தலைப்பட்டனர் பலர். சின்னாளில் இறந்து பட்டது அந்நூல். ஆனால் சொற்பொழிவு என்பது வழக்காற்றில் வந்துவிட்டது" என்கிறார். 

ஐரோப்பியருடைய காலத்தில் சமயப் போராட்டம் முதன்மை பெற்றிருந்ததால் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகமாகச் சொற்பொழிவு பயன்பட்டது. ஈழத்துச் சொற்பொழிவுத் துறையில் மிக முக்கியமானவராகத் திகழும் ஆறுமுகநாவலர் 1848 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முதனாளிரவு வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலில் தனது முதலாவது பிரசங்கத்தை நிகழ்த்தினார். ஆனால் அவரது இறுதிச் சொற்பொழிவு அவரது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவதாகவும் மக்கள் மனோநிலையைக் குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது.

“நான் உங்களிடத்தில் கைம்மாறு பெறுதலைச் சிறிதும் எண்ணாது முப்பத்திரண்டு வருட காலம் உங்களுக்குச் சைவ சமயத்துண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவசமயம் குன்றிப்போமென்று பாதிரிமார் சொல்லுகின்றார்கள். ஆதலால், நான் உயிரோடிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் என்னைப் போலப் படித்தவர்களும் சன்மார்க்கர்களுமாய் அநேகர் வருவார்கள். ஆனால், உங்களுடைய வைவுகளைக் கேட்டுக்கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப்போல ஒருவரும் வரார். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம்.” 

இவ்வாறு சமயத் தளத்தில் பயிலப்பட்டு வந்த சொற்பொழிவு பெரிய புராணம், கந்த புராணம் ஆகிய தமிழ்க் காப்பியங்களை இந்து சமயத் தளத்தில் இரசனை முறையில் எடுத்தியம்புவதான உரைகளைக் கொண்டு அமைந்தது. ஆறுமுகநாவலர், வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சபாபதி நாவலர், சதாவதானி கதிரைவேற்பிள்ளை போன்றோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கலையைத் தமிழகத்திற்கும் எடுத்துச் சென்றனர். ஏனைய சமயத்தவரும் தத்தம் கோவில்களைத் தளங்களாகக் கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றினர்.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கட்சி அரசியல் சார்ந்து சொற்பொழிவாற்றும் நிலை மேலெழுந்தது. ஈழத்தில் அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம், செ.இராசதுரை, புதுமைலோலன், வி.பொன்னம்பலம் போன்றோர் பிரபலம் பெற்ற அரசியற் சொற்பொழிவாளர்களாகத் திகழ்ந்தனர். பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானின் தமையனாராக விளங்கிய புதுமைலோலன் ஈழத்தின் முதலாவது சொற்பொழிவுப் பயிலகத்தை நிறுவிய பெருமைக்குரியவர். இவர் தொடக்கநிலைப் பேச்சாளர்களுக்கு உதவும் முகமாக ‘அண்ணா சொற்பயிற்சி மன்றம்’ என்ற பெயரில் ஒரு நிலையத்தை யாழ்நகரில் நிறுவி நடத்தினார் என அறியமுடிகின்றது.08 செ. இராசதுரை அரசியல் மேடைகளில் இலக்கியச் செய்திகளுக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கி உரையாற்றினார். 

ஈழத்தில் பெண் சொற்பொழிவாளர்களுடைய எழுச்சி 1950 களிலேயே இடம்பெற்றது. பெண் கல்விக்குரிய வாய்ப்புக்களின் பின்னணியிலேயே இவ் எழுச்சியை நோக்கமுடியும். தங்கம்மா அப்பாக்குட்டி, மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், வசந்தா வைத்தியநாதன், மனோன்மணி சண்முகதாஸ் சத்தியதேவி துரைசிங்கம், பொன்.பாக்கியம் போன்றோர் பிரபலம் பெற்ற சொற்பொழிவாளர்கள் ஆவர். இவர்களின் ஆற்றுகை முறைமையில் ஆண்குரல் இழையோடியிருப்பதாகக் கருதப்படுகின்றது.

தமிழ் இலக்கியங்களைச் சொற்பொழிவாற்றுகின்றவர்கள் இரசனை முறைத் திறனாய்வுப் போக்கையே தமது சொற்பொழிவுகளில் கையாள்கின்றனர். நாவலர் தொடங்கி வைத்த கந்தபுராண இலக்கியப் பாரம்பரியம் யாழ்ப்பாணத்தவர்களுடைய கலாசாரமாகத் தொற்றிக் கொண்டது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை இக்கலாசாரத்திற்கு வலுச்சேர்த்தோருள் முக்கியமானவர். 1980 களின் பின் சொற்பொழிவுத் துறையில் புகுந்துகொண்ட இ.ஜெயராஜ் கம்பராமாயண இரசனை மரபுக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கினார். 1990களில் யாழ்ப்பாணப் பண்பாடு கம்பராமாயணப் பண்பாடோ? என வியக்கவைக்கும் அளவிற்கு கம்பராமாண இலக்கியம் குறித்த எழுச்சியை இவரது சொற்பொழிவுகள் ஏற்படுத்தின. 

தமிழ் இலக்கியங்களை அடிநிலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்குச் சொற்பொழிவுப் பண்பாடே பெரும்பங்காற்றுகின்றது. பெரியபுராணம், கம்பராமாயணம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்கள் குறித்தான சொற்பொழிவுகள் இன்றும் கோவில்களை அடியொற்றி நிகழ்த்தப்படுகின்றன. இரசனை முறையில் இருந்து விலகி அமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்த பார்வைகளை வெளிக்காட்டச் சில இளம் சொற்பொழிவாளர்கள் முயல்கின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தம். 

சொற்பொழிவும் மாற்றுவடிவங்களும்

சொற்பொழிவு என்ற கலையுடன் தொடர்புடைய மாற்று வடிவங்களாகப் பல வடிவங்கள் கையாளப்படுகின்றன. பட்டி மண்டபம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர், தர்க்கப்பிரசங்கம், உரையரங்கம், அரட்டையரங்கம், இசைச்சொற்பொழிவு (கதாப்பிரசங்கம்), நேர்முகவர்ணனை முதலியனவற்றை மாற்று வடிவங்களாக இனங்காட்டலாம். 

இதைவிடப் பொது நிகழ்வுகளில் பல்வேறு உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அஞ்சலியுரை, அருளுரை, அறிமுகவுரை, ஆசியுரை, ஆய்வுரை, ஏற்புரை, கருத்துரை, சிறப்புரை, தர்க்கவுரை, தெய்வீகவுரை, தொகுப்புரை, நயப்புரை, நன்றியுரை, நிறைவுரை, நினைவுரை, பாராட்டுரை, பிரார்த்தனையுரை, மொழிபெயர்ப்புரை, வரவேற்புரை, வாழ்த்துரை, விமர்சனவுரை, விளக்கவுரை, வெளியீட்டுரை என இவற்றைப் பலவாறாக நோக்க முடியும்.09 இந்த உரைகள் வௌ;வேறு அர்த்தமுடையவையாயினும் இவற்றை ஆற்றுபவர்கள் இவ்வுரைகள் பற்றிய போதிய தெளிவைக் கொண்டிருக்காத நிலைமை காணப்படுகின்றது. இலக்கிய நூல் வெளியீடுகளின் போது வெளியீட்டுரை, ஆய்வுரை, நயப்புரை என்பவற்றிற்கான அடிப்படை வேறுபாடுகளைப் பலர் அறிந்திருக்காத நிலைமையிருப்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

சொற்பொழிவு ஆற்றுகை முறைமை

சொற்பொழிவு ஆற்றுகை முறைமையிலும் தற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆரம்ப காலங்களில் பல சொற்பொழிவாளர்கள் கடவுள் வணக்கப்பாடல் அல்லது தமிழ் வணக்கப் பாடல்ககளுடனேயே சொற்பொழிவுகளை ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து சபையோரை விளித்தனர். ஆனால் தற்போது பாடல்களைப் பாடிச் சொற்பொழிவுகளை ஆரம்பித்தால் அது உபந்நியாசம் என்ற வகைப்பாட்டில் நோக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. பெரியோர்களை விளிக்கும் போது வருகையாளர்கள் யாவரையும் விளிப்பது சொற்பொழிவின் கனதியைக் குன்றச் செய்துவிடும். அழைப்பிதமில் உள்ள அத்தனை பெயர்களையும் விளித்து நேரத்தை விழுங்கக் கூடாது. பேசப் போகும் விடயத்திற்கே அதிக முக்கியத்துவம் உண்டு.

"அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்”


(திருக்குறள்: கல்லாமை 01) என்கிறார் வள்ளுவர். 

பேசப் போகும் விடயம் பற்றிக் குறிப்பிடும் ஆ. முத்துசிவன் “விஷயத் தெளிவு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் அத்தனை விஷயங்களையும் ஒரு தபால் தலைக்குள் அடக்கிக்கொள்ளும்படி அவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும்” என்கிறார். பொருளுடன் உச்சரிப்பு, தொனி, தெளிவு, மெய்ப்பாடு முதலிய அம்சங்களுக்கும் சொற்பொழிவாளான் முதன்மை வழங்க வேண்டும். இதன் மூலமே சிறப்பான ஆற்றுகையை வெளிப்படுத்த முடியும். 

சொற்பொழிவுகளில் நகைச் சுவைக்கு முக்கியத்துவம் வழங்கும் போக்கும் அண்மைக்காலங்களில் தலைதூக்கியுள்ளது. பேசப் போகும் விடயத்துடன் அடியொற்றியதாக அமையாமல் வேறு தளங்களில் நகைச்சுவைகள் அமைவது சொற்பொழிவின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதாகவே அமையும்.

சொற்பொழிவுச் செயற்பாட்டிற்கான் நேரம் பற்றிய பிரக்ஞை முக்கியமானது. உலக மயமாக்கலின் விளைவாகவும் இலத்திரனியல் சார்ந்த பொழுது போக்கு ஊடகங்களின் பெருக்கம் காரணமாகவும் சொற்பொழிவின்பால் நாட்டங்கொள்ளும் நுகர்வோருடைய எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இச்சவாலை எதிர்கொள்ளச் சொற்பொழிவாளர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர். குரலை ஏற்றி இறக்கிப் பாத்திரக் கூற்றுக்களைத் தம்முள் புகுத்தி நாடகப் பாணியில் பேசுதல், சொற்பொழிவின் நிறைவில் சபையோரிடம் வினாக்களைத் தொடுத்துச் சரியான விடை கூறியோருக்குப் பரிசுகள் வழங்குதல் முதலியன இவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். எது எவ்வாறெனினும் விளிப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற நிலையில் சொற்பொழிவுச் செயற்பாடு முக்கிய மூன்று கூறுகளைக் கொண்டு அமைந்திருக்கும். 

இலக்கிய அந்தஸ்து

பிரபல சொற்பொழிவுகளை நூலுருவில், இறுவட்டு வடிவில் வெளியிடும் நிலையும் காணப்படுகின்றது. நூலுருவில் வெளியிடப்பட்ட சொற்பொழிவுகள் சொற்பொழிவு இலக்கியம் என்ற வகுதிக்குள் அடக்கப்படுகின்றன. சொற்பொழிவின் முக்கியத்துவம் கருதி அதனை நவீன இலக்கிய வடிவங்களுள் ஒன்றாகக் கொள்ளலாம் என்ற முன்மொழிவை க. சிவகாமி வழங்கியுள்ளார்.

“பிரசங்கம் என்பது கட்டுரை இலக்கியத்தின் மாற்று வடிவம் என ஏற்கலாம். கடித இலக்கியம் போன்று இதுவும் இன்னும் தோற்ற நிலையிலேயே உள்ளது. சொற்பொழிவு, பிரசங்கம், சொற்பெருக்கு, சிறப்புரை, உரை, உபந்நியாசம், மேடைப்பேச்சு எனப் பலவாறாக வழங்கப்படும் இவ்விலக்கியம் மேடையைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது” என்கிறார்.

சொற்பொழிவுக் கலையை மேம்பாடடையச் செய்வதற்கான விதப்புரைகள்

சமூக மாற்றங்களை ஏற்படுத்த வல்ல சொற்பொழிவுத் துறையின் நிலை இன்று ஆரோக்கியமாக இருப்பதாகக் கருத முடிவில்லை. குறிப்பாக ஈழத்தின் சொற்பொழிவுத் துறையில் இளம் சொற்பொழிவாளர்களுடைய பங்களிப்புக் குறைவாகவே இருக்கின்றது. இந்நிலையில் இத்துறைசார் வளர்ச்சிக்காக மேல்வரும் விதப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.

* சொற்பொழிவாளர்கள் தாம் பேசப் போகும் விடயம் பற்றிய பூரண தெளிவைக் கொண்டிருத்தல்
*மாணவர்களிடையே சொல்வன்மைப் போட்டிகளை நடத்துததல்
*சொல்வன்மைப் போட்டிகளுக்குத் துறைசார்ந்த நடுவர்களைத் மத்தியஸ்தர்களாக நியமித்தல்
*சொற்பொழிவாளர்களுக்கு உரிய மதிப்பினை வழங்கி ஊக்குவித்தல்
*கலாபூசணம், சாகித்தியரத்னா முதலிய விருதுகள் சொற்பொழிவுத் துறைக்கு இதுவரை வழங்கப்படவில்லை 
*சொற்பொழிவுகளை இறுவட்டு வடிவிலோ நூலுருவிலோ ஆவணப்படுத்தல்
*அருகிவரும் மரபுக் கலைகள் என்ற வரிசையில் (குறிப்பாகப் பிரசங்கம், கதாப்பிரசங்கம்) கணிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படல்
*சொற்பொழிவுப் பயிலகங்கள் நிறுவப்படல்
*வானொலி, காணொலி போன்ற ஊடகங்களில் இலக்கியம், மற்றும் துறைசார்ந்த (உளவியல்) சொற்பொழிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குதல்

நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஈழத்தின் சொற்பொழிவுச் செல்நெறி, கால மாற்றங்களுக்கேற்பத் தன்னுள்ளும் மாற்றங்களைக் கண்டு தனது இருப்பை நிலைநிறுத்தி வருகின்றது.

No comments:

Post a Comment