Friday, June 10, 2011

மதராசபட்டிணம்-திரை விமர்சனம்



தமிழ் சினிமாவில்…மீண்டும் ஒரு வித்தியாசப் படைப்பு. கிரீடம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான்  “மதராசபட்டிணம்”. தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரையும் பொதிக்க மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் விஜய்க்கு முதலில் ஒரு சல்யூட்.
நாயகன் ஆர்யா :
அட்டகாசப்படுத்தியிக்கார் மனுஷன். வித்தியாசமான கதைக்களத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தூள்பரத்துகிறார். சலவைத் தொழிலாலியான தன்னுடைய பாத்திரத்திற்க்கு உயிரூட்டியிருக்கிறார் ஆர்யா. காதல் நாயகனாக நடிப்பிலும், அவருடைய வீரத்தைக் காட்டுவதிலும் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
நாயகி ஏமி ஜாக்சன் :
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். வசீகரிக்கும் அழகு. அளவான, அழகான நடிப்பு. முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஹீரோயினிக்கு இதுதான் முதல் திரைப்படம். படம் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது நெஞ்சைவிட்டு அகல மருக்கிறார் ஏமி ஜாக்சன். நமக்கு கிடைத்த கொசுறு செய்தி ஏமி ஜாக்சன் “மிஸ்.இங்கிலாந்து” பட்டம் வென்றவர் என்று. புடவை கட்டி வரும் காட்சிகளில் நம் மனதைத் திருடுகிறார் இந்த அழகிய கள்ளி.
படத்தின் கதைச்சுருக்கம் :
லண்டனிலிருந்து 60 வருடங்கள் கழித்து ஒரு 80 வயது பாட்டி சென்னைக்கு திரும்பி வருகிறார். ஒரு பழைய போட்டோவை வைத்துக் கொண்டு அவரைத் தேடி சென்னை முழுவதும் அலைகிறார். இன்றைய தினம் அவர் பார்க்கும் இடங்கள், சம்பவங்களை வைத்து 1945 க்கு பின்னோக்கி  பயனிக்கிறது கதை. 1945 -ம் ஆண்டு காலகட்டங்களில் இருந்த மதராசபட்டிணத்தை நம் கண்முன்னே கொண்டு வந்த படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு பூங்கொத்து.
இந்த பாட்டிதான் படத்தின் நாயகி. ஆமாங்க, 60 வருடத்திற்க்கு முன்னால் பயணிக்கறது கதை.  1945 ல் மதராச பட்டிணத்திற்கு வருகிறார் சென்னை மாகாண கவர்னரின் மகள் ஏமி ஜாக்சன். வந்த இடத்தில் சலவைத் தொழில் செய்யும் நம்ம ஆர்யாவின் அழகு, வலிமை கண்டு அவர் மீது காதல் கொள்கிறார்.
சென்னை மாகாண போலீஸ் கமிஷனர் ஏமியின் அழகில் மயங்க, இவருக்கு ஏமி மீது காதல் ஊற்றெடுக்கிறது. கவர்னர் திடீரென ஏமிக்கும் போலீஸ் கமிஷனருக்கும் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி நாயகி ஏமி ஜாக்சன், நாயகன் ஆர்யா மீது தீவிரமான காதலை வளர்க்கிறார். இதனிடையே இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு எடுக்கிறது. மகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு செல்ல முடிவெடுக்கிறார் கவர்னர். ஆனால் அவரிடமிருந்து ஏமி தப்பித்து ஆர்யாவைத் தேடி ஓடுகிறார். 1947 ல் நடக்கும் இந்த காதலின் முடிவு 2010 ல் எப்படி தொடர்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. படத்தின் கதை, காட்சியமைப்புகள் போன்றவை ஏற்கனவே வந்த டைட்டானிக் மற்றும் சில படங்களின் சாயல் இருந்தாலும் அது பெரிய குரையாகத் தெரியவில்லை. காரணம் 1945 ம் ஆண்டுப் பின்னணி, அதைக் காட்சிப்படுத்திய விதம் நம்மை கதையோடு ஒன்றச்செய்து விடுகிறது. சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்குப் பின்னணி.
நாசர், விஎம்சி ஹனீபா, எம்எஸ் பாஸ்கர், பாலாசிங் ஆகியோரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் தாலாட்டுகின்றன. குறிப்பாக வாம்மா துரையம்மா,  பூ பூக்கும் தருணம், ஆருயிரே பாடல்கள். படத்தில் மைனஸ் இருந்தாலும் ஒரு நல்ல படத்திற்க்கு குறை சொல்ல மனம் வரவில்லை.
மதராசபட்டிணம் – வித்தியாசமான முயற்சியில் வெற்றி.

No comments:

Post a Comment